விமானத்தில் பெண் ஒருவர் பூனைக்கு தாய்ப்பால் புகட்ட அதைப் பார்த்த ஒட்டுமொத்த பயணிகளும் அதிர்ந்து போன சம்பவம் நடந்துள்ளது.


அமெரிக்காவில் அட்லான்டா நகரை நோக்கி பறந்து கொண்டிருந்த உள்ளூர் தனியார் விமானத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


டெல்டா ஏர் ஃப்ளைட் நிறுவனத்தின் டிஎல் 1360 (DL1360) என்ற பயணிகள் விமானத்தில் திடீரென பெண் ஒருவர் பூனைக்குட்டி தாய்ப்பால் புகட்டியுள்ளார். இதனை கவனித்த விமான சிப்பந்தி பெண் ஒருவர் அந்தப் பெண்ணிடம் அவ்வாறு செய்ய வேண்டாம், பூனையை பத்திரமாக விமானத்தில் செல்லப் பிராணிகளுக்காக இருக்கும் இடத்தில் கொண்டு வைக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் அந்தப் பெண்ணோ எதையுமே சட்டை செய்யாமல் அவர் வேலையில் இருந்துள்ளார். விமானத்தில் இருந்த சக பயணிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். சிலர் இது அருவருப்பாக இருப்பதாக கூச்சலிட்டனர். இன்னும் சிலர் பயமாக இருக்கிறது அந்தப் பெண் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று கேள்வி எழுப்பினர்.




விமானத்துக்குள் கூச்சல் குழப்பம் ஏற்படவே தகவல் விமானியின் கவனத்துக்குச் சென்றது. விமானியும் ஒலிப்பெருக்கியின் மூலம் அந்தப் பெண்ணிடம் கோரிக்கை விடுத்துப் பார்த்தார். ஆனால் அவர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. இதனையடுத்து விமானி விமான நிலையத்துக்கு தகவல் அனுப்பினார். அதில் விமானத்தில் பெண் ஒருவர் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.


இது விமான நிலையத்தில் இருந்த பெரிய திரையில் ஓடியது. "Req Redcoat meet AC Pax (passenger) in (seat) 13A is breastfeeding a cat and will not put cat back in its carrier when FA (flight attendant) requested," என்ற தகவல் அந்தத் திரையில் ஓடியது.  


இதனை விமான நிலையத்தில் இருந்த பலரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். மேலும் பலரும் அதனைப் புகைப்படம் எடுத்து தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர்.