எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்.. ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
கர்நாடக இசை கலைஞர் எம் எஸ் சுப்புலட்சுமியின் பையோப் இல் நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்து படத்தின் தயாரிப்பாளர்

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எம்.எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. கமல்ஹாசன் கிளாப் அடித்து படத்தின் பணிகளைத் தொடங்கி வைத்தார். கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தொடக்க விழாவில் கலைப்புலி எஸ். தாணு, சமுத்திரக்கனி, சிவகுமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்கள் இசைக்கப்பட்டு அவருக்கு இசையஞ்சலி செலுத்தப்பட்டது. கமல்ஹாசன், எம்.எஸ். சுப்புலட்சுமியை தாம் ரசிகராகவே பார்த்ததாகவும், பின்னர் ‘ஹே ராம்’ படத்துக்காக அவரை சந்திக்க முயன்றதாகவும் நினைவுகூர்ந்தார். அவரது வாழ்க்கையில் இசை மட்டுமல்லாமல் நடிப்பு, வீணை வாசிப்பு, நடனம் என பல திறமைகள் இருந்ததாகவும் விழாவில் பேசப்பட்டது.
இப்படம் வெறும் இசைக் கலைஞரின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல், இளம் வயதில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், தனித்துவத்தை கைவிடாமல் எடுத்த முடிவுகள், இசை மீது கொண்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பதிவு செய்யும் வகையில் உருவாகிறது. இதனால் ராஷ்மிகா ஏற்றிருக்கும் கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடல் மொழி, குரல் வெளிப்பாடு மற்றும் மேடை ஆளுமையை திரையில் கொண்டு வருவதற்கான பணியும் படக்குழுவின் முன் உள்ளது.
7 ஆண்டுகள் போராட்டம்
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்குவதற்காக தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பென்னி வாசு ஆகியோர் சுமார் ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தனர். இந்தப் படத்துக்கான உரிமையை எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்பத்தினரிடம் இருந்து பெற்றதாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் விழாவில் தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் முக்கியமானதாக அமைந்துள்ளது.
ராஷ்மிகாவை தேர்வு செய்தது ஏன்?
ராஷ்மிகாவை எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தது குறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசினார். எம்.எஸ். அம்மாவாக நடிக்க நடிகையை தேர்வு செய்வது எளிதான முடிவு அல்ல என்றும், பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு ராஷ்மிகாவை அணுகியபோது அவர் மனதார நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அல்லு அரவிந்தும் ராஷ்மிகா தேர்வு எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக கொண்டு செல்லும் பயணத்தில் முக்கியமானதாக அமைந்ததாக தெரிவித்தார்.
ராஷ்மிகா மந்தனா என்ன பேசினார்
ராஷ்மிகா விழாவில் பேசும்போது, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்குத் தன்னை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். அவருடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருப்பதாகவும், இந்தப் படைப்பில் தன்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை வழங்குவதாகவும் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















