சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்க முதல் இந்திய நடிகராக நடிகர் விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்க உள்ளார். இதன் மூலம் சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச எம்மி விருதுகள்
54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழா வரும் நவம்பர் 23-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விழாவில் விருது வழங்கும் நிகழ்வில் விஜய் சேதுபதி பங்கேற்க உள்ளதாக ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை நடிகர் விஜய் சேதுபதிக்கு ஏற்படுத்திக் கொடுத்ததில் சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தயாரிப்பாளருமான கவிதா குப்தாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியக் கலைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
இதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டு சர்வதேச எம்மி விருதுகள் விழாவை நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் தொகுத்து வழங்கினார். அவரது 'Vir Das: Landing' நிகழ்ச்சிக்கு 2023-ம் ஆண்டு சர்வதேச எம்மி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2016-ம் ஆண்டு நடைபெற்ற 68-வது பிரைம் டைம் எம்மி விருதுகள் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் டாம் ஹிடில்ஸ்டனுடன் இணைந்து விருது வழங்கினார். இந்த நிலையில், சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற புதிய சாதனையை விஜய் சேதுபதி படைக்க உள்ளார்.
எம்மி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படைப்புகள்
இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சோனி லைவ் தளத்தில் வெளியான 'Real Kashmir Football Club' தொடர் சிறந்த நாடகத் தொடருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வீர்தாஸின் 'Vir Das: Fool Volume' நிகழ்ச்சி சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியக் கலைஞர்களும் படைப்புகளும் சர்வதேச அளவில் தொடர்ந்து அங்கீகாரம் பெற்று வரும் நிலையில், விஜய் சேதுபதியின் இந்தப் பங்கேற்பு இந்தியத் திரையுலகிற்கு மேலும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், விஜய் சேதுபதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரெயின்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து 'இஞ்சி வெல்லம்' படத்திலும், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' படத்திலும் நடித்து வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















