Venkat Prabhu : ”மாநாடு” பட பிளைட் சீன் எடுக்க பாடுபட்ட வெங்கட் பிரபு.. சுவாரஸ்யம் கேளுங்க
Venkat Prabhu :மாநாடு படத்தின் முக்கியமான பிளைட் சீன் எடுக்க வெங்கட் பிரபுவின் ஒட்டுமொத்த டீமும் எந்த அளவுக்கு பரபரப்பாக வேலை செய்தார்கள் என்பது குறித்து வெங்கட் பிரபு பகிர்ந்து இருந்தார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சென்னை 28, மங்காத்தா, கோவா, சரோஜா, மாஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது நடிகர் விஜயுடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள 'தி கோட்' படம் நாளை உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உச்சத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'மாநாடு'. சிம்பு, கல்யாணி, பிரேம்ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக டைம் லூப் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் சிம்புவுக்கு நல்ல ஒரு கம் பேக் படமாக அமைந்த மாநாடு படத்தில் அதிகமாக இடம்பெற்ற பிளைட் சீக்வன்ஸ் பலராலும் பாராட்டப்பட்டது. அதற்காக நடிகர் சிம்பு அளித்த ஒத்துழைப்பு குறித்தும், அந்த காட்சி படமாக்க பட்டபாடு பற்றியும் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் பேசி இருந்தார் வெங்கட் பிரபு.
அது தொடர்பாக அவர் பேசுகையில் பிளைட் சீக்வன்ஸ், ரன்வே காட்சிகள் என பிளைட் காட்சி மொத்தமாக ஒன்றரை நாட்களில் படமாக்கப்பட்டது. அந்த காட்சியை படமாக்க இரண்டு நாட்கள் தான் டைம் கொடுத்தார்கள். ஓசூரில் அந்த காட்சியை எடுத்தோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பிளைட்டை ஒரு இடத்தில் பார்க் செய்து வைத்து இருந்தார்கள். அது பிளைட் சர்வீஸ் செய்யும் ஒரு இடம். நிறைய ஷாட் எடுக்க வேண்டி இருக்கு என்பதால் காலையிலேயே ஷூட்டிங் எடுப்பதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். பிளைட் பறப்பது போல காட்ட வேண்டும் என்பதற்காக அனைத்து லைட்டிங் வேலைகளையும் செய்து விட்டோம். ஷாட் ஆரம்பிக்க தயாராக இருக்கும் போது திடீரென அதிகாரிகள் வந்து அருகில் ஆர்மி பிளைட் ஒன்று இருக்கிறது. அதனால் இங்கே எடுக்க கூடாது என சொல்லிவிட்டார்கள். அதெல்லாம் படத்தில் வராது, பிளைட் உள்ளே தான் ஷூட்டிங் எடுக்க போறோம் என எவ்வளவு சொல்லியும் அவர்கள் அங்கே எடுக்க அனுமதி இல்லை என மறுத்து விட்டார்கள்.
அதனால் ஷூட்டிங்கை வேறு ஒரு இடத்தில் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிளையிட்டை வேறு ஒரு இடத்தில் பார்க் செய்து, தயார் செய்து வைத்த அனைத்தையும் அங்கே மறுபடியும் கொண்டு போய் செட் செய்யவே பாதி நாள் போனது. புரொடியூசர் கிட்ட இன்னும் அரை நாள் பெர்மிஷன் கேட்டால் முடியவே முடியாது என சொல்லிவிட்டார். என்ன பண்றது என்றே புரியவில்லை.
சிம்புவை கேரவேனுக்கு அனுப்பவே இல்லை. சேர் போட்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டார். சிம்பு அந்த சமயத்தில் அட்டகாசமாக ஒத்துழைத்தார். இது அந்த லூப் இது இந்த லூப் என சொல்ல சொல்ல டக் டக் என ரியாக்ஷன் மாற்றி கடகடவென இரண்டு கேமராவை வைத்து எடுத்துவிட்டோம்.
கல்யாணியின் போர்ஷனுக்காக கேமராவை எப்படி பொருத்துவது என தெரியாமல் யோசித்து ஒரு ஐடியா செய்து சேர்களை எல்லாம் எடுத்து தனியாக செட் செய்து அவசர அவசரமாக அந்த காட்சியை எடுத்து முடித்தோம். இது அனைத்தையும் ஒன்றரை நாளில் எடுத்து முடிப்பது டார்ச்சராக இருந்தது. ஒட்டுமொத்த டீமே அந்த ஷாட் எடுக்க பயங்கரமான பிரஷரில் வேலை செய்தார்கள் என்றார்