HBD Charle: தமிழ் சினிமாவின் பொக்கிஷம்: சார்லியின் பிறந்தநாள்.. அவர் நடிக்க வந்த கதை தெரியுமா?
“நான் திரைத்துறையில் 42 வருடமாக இருந்துக் கொண்டிருப்பதை நினைத்து சந்தோசப்படுகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு முன்னாடியே சார்லி ஒரு நடிகராக தான் இருந்தான்”
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக திகழும் சார்லி இன்று தனது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சார்லியை பொறுத்தவரை நடிக்க எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னியெடுத்து விடுவார். சோகம், காமெடி, நெகிழ வைக்கும் கேரக்டர் என்றால் சார்லிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சத்யராஜ், முரளி தொடங்கி தற்கால அறிமுக நாயகர்கள் வரை அனைவரது படத்திலும் நடித்து விட்டார். இப்படியான சார்லி தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததே ஒரு தனிக்கதை. அதனைப் பற்றி நாம் இங்கு காணலாம்.
சினிமாவுக்கு வரும் முன்பே நடிகர்
ஒரு நேர்காணலில் பேசிய சார்லி, “நான் திரைத்துறையில் 42 வருடமாக இருந்துக் கொண்டிருப்பதை நினைத்து சந்தோசப்படுகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு முன்னாடியே சார்லி ஒரு நடிகராக தான் இருந்தான். காரணம் 1980களில் செய்தி,ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் இசை, நாடகப்பிரிவு என்ற பிரிவு இருந்தது. இதை 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதை வேறு ஒரு பிரிவுடன் இணைத்து விட்டார்கள். அதில் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நடிப்புத்துறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். என்னை எப்படி தேர்வு செய்தார்கள் என்பது இப்போதும் ஆச்சரியமாக இருக்கும். நான் பல மொழிகளில் நாடகங்களில் நடித்ததால் 58 வயது வரை பணிபுரிய ஒப்பந்தம் செய்தார்கள்.
அதற்கு மறுநாள், சோவியத் கலாச்சார நூலகத்தில் எடுத்த புத்தகத்தை திரும்ப கொடுக்க சென்றேன். அன்றைக்கு ஜோக் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அந்த இடத்தைப் பார்த்ததும் சின்னதாக டென்ஷனாக இருந்தது. நான் ஜோக் பண்ணலாமா என கேட்டேன். ஆனால் கிளப்பில் உள்ளவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என சொல்லிவிட்டார்கள். எனக்கு அவமானமாக போய்விட்டது. அப்போது நான் எழுதிய பேப்பரை கீழே இருந்து தவறுதலாக எடுத்த பெரியவர், நடிகர் ஒருவர் ஜோக் சொல்லப் போகிறார் என தெரிவிக்க, நான் மேடையேறி என் திறமையை நிரூபித்து காட்டினேன்.
பின்னர் வெளியே வந்து நூலகத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, பின்னால் இருந்து ஒரு குரல், “நீங்கள் தொழில்முறை நடிகரா?” என கேட்டது. நான் ஆமாம் என சொல்லவும், தங்கியிருக்கும் இடத்தை சொன்னேன். என்னிடம் கேட்டவர் கலாகேந்திரா தயாரிப்பாளர் கோவிந்தராஜன். அவர் என்னிடம் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்தார்.
பாலசந்தர் பட்டறையில் தீட்டப்பட்ட வைரம்
அந்நேரம் அக்னி சாட்சி படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைக்க என்னை பாலசந்தர் தேடினார். ஆனால் நான் ஹைதராபாத்தில் ஒரு நாடக நிகழ்ச்சிக்காக சென்று விட்டேன். ஊர் திரும்பிய என்னிடம், எங்கேயாவது போக வேண்டும் என்றால் விவரம் சொல்ல வேண்டும் என பாலசந்தர் கூறினார். 1982 ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை படம் மூலம் என்னை சினிமாவில் அறிமுகம் செய்தார்.
என் இயற்பெயர் மனோகர் தான். பொய்க்கால் குதிரை பட ஷூட்டிங்கின் கடைசி கட்டத்தில் இந்த படத்தில் உன்னுடைய பெயர் சார்லி.இனிமேல் இந்த பெயரில் தான் உலகம் அழைக்கும் என கே.பாலசந்தர் தெரிவித்தார். அப்படத்தின் டைட்டிலில் “எங்கள் கண்டுபிடிப்பு சார்லி” என இடம் பெற்றதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் 850 படங்கள் நடித்து விட்டேன்” என சார்லி தெரிவித்திருந்தார்.
உண்மையில் சார்லி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். கோவில்பட்டியில் பிறந்து தமிழ் சினிமாவின் கோபுரத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்த அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!