‘தி டார்க் ஹெவன்’ செப்டம்பர் 18-ல் ரிலீஸ்.. சித்து, ரித்விகா, தர்ஷிகா நடித்த சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர்!
‘தி டார்க் ஹெவன்’ செப்டம்பர் 18-ல் வெளியாகிறது. சித்து, ரித்விகா, தர்ஷிகா நடித்துள்ள இப்படம் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

நாட்டார் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முழுநீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. ‘D3’ படத்தை இயக்கிய பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார். சித்து, பிக் பாஸ் புகழ் தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். லாவர்தன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
கொலை மற்றும் அதைச் சுற்றியுள்ள விசாரணையை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. காடு, மலை போன்ற சவாலான பகுதிகளில் இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகை ரித்விகா பேசும்போது, தற்போது போலீஸ், முகமூடி மனிதர், விசாரணை என ஒரே மாதிரியான பின்னணியில் பல த்ரில்லர் படங்கள் உருவாகி வருவதாகவும், ‘தி டார்க் ஹெவன்’ அவற்றிலிருந்து மாறுபட்ட திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார். இப்படத்திற்காக படக்குழுவினர் இருமடங்கு உழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் பாலாஜி பேசுகையில், படத்தின் பெரும்பகுதியை முடித்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி முடிப்பது மிகவும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார். சித்து உள்ளிட்ட படக்குழுவினர் தனக்கு அளித்த ஆதரவு இந்தப் படத்தை முடிக்க முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறினார். நல்லதை கேட்டுக்கொண்டு, கிடைக்கும் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
கதை நாயகன் சித்து, இது தனது முதல் முழுமையான படம் என்றும், முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்ததாகவும், மூத்த நடிகர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். செப்டம்பர் 18-ம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, இது தனது முதல் க்ரைம் த்ரில்லர் படம் என்றும், இயக்குநர் பாலாஜி சொன்ன ஒன்லைன் கதை தன்னை கவர்ந்ததாகவும் கூறினார். ஒளிப்பதிவாளர் மணிகண்டன், மர்மமும் திகிலும் நிறைந்த கதைக்கு ஏற்ற இடங்களைத் தேடி படமாக்கியதாக தெரிவித்தார். பிக் பாஸ் புகழ் தர்ஷிகா, இது தனது முதல் படம் என்றும், த்ரில்லர் கதையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். படத்தின் காட்சிகள், இசை, ஒளிப்பதிவு ஆகியவை திரையரங்கு அனுபவத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய நடிகர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாகவும் கூறப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















