VJ ManiMegalai: குக் வித் கோமாளியில் இருந்து திடீரென விலகிய விஜே மணிமேகலை..! ரசிகர்கள் அதிர்ச்சி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் பங்கேற்கும் கடைசி எபிசோட் குறித்து போட்டியாளர் விஜே மணிமேகலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் பங்கேற்கும் கடைசி எபிசோட் குறித்து போட்டியாளர் விஜே மணிமேகலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜே மணிமேகலை
கடந்த 2009ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் மணிமேகலை. பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய அவர் ரசிகர்களிடையே மிகப்பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்தார். தொடர்ந்து தனது நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஹூசைனை 2017 ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அதிலிருந்து விலகினார்.
அதன்பிறகு விஜய் டிவியில் எண்ட்ரீ கொடுத்த மணிமேகலை கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் அதே சேனலில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் கணவர் ஹூசைனுடன் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் மணிமேகலை வெற்றிப் பெறவில்லை என்றாலும் அதன்பிறகு விஜய் டிவியில் ஒருவராக மாறினார்.
திருப்புமுனையாக அமைந்த குக் வித் கோமாளி
இதன் தொடர்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கினார். ஆனால் நடுவில் கொரோனா ஊரடங்கு வர கணவர் ஹூசைனுடன் சொந்த ஊருக்கு சென்று தனது யூட்யூப் சேனலில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர், போட்டியாளர், யூட்யூப் சேனல், சமூக வலைத்தளம் என எப்போதும் பிசியாக இருக்கும் மணிமேகலை சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திடீரென விலகல்:
அதில், ”குக் வித் கோமாளியின் எனது கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பாகிறது. இதில் "நானே வருவேன்" கெட்அப்பில் "நான் வரமாட்டேன்" என்று அறிவிக்கிறேன். 2019 ஆம் ஆண்டு முதல் சீசன் முதல் குக் வித் கோமாளியின் எனது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் அனைவருமே அபரிமிதமான அன்பைப் கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் சிறந்த பங்களிப்பை அளிக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்கள் அனைவரையும் நான் மகிழ்வித்துள்ளேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பு எதிர்பாராதது. நான் என்ன செய்தாலும் உங்களிடம் இருந்து அதே அன்பைப் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மணிமேகலை என்ன காரணத்திற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறார் என்ற காரணம் தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.