Sun Hollywood : சன் குழுமத்தின் அடுத்த டார்கெட் சன் ஹாலிவுட்! 24 மணிநேரமும் சரவெடி போல ஹாலிவுட் படங்கள்தான்...
Sun Hollywood : சன் நெட்வொர்க் குழுமம் புதிதாக "சன் ஹாலிவுட்" என்ற புதிய சேனலை கொண்டு வர உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து இன்றும் சிம்மாசனத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் உச்சத்தில் இருந்து வரும் தொலைக்காட்சி சேனல் சன் டிவி. தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் சன் நெட்வொர்க் தான் முன்னிலை வகித்து வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன் டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என்றால் என்றுமே மவுசு தான். அந்த வகையில் பல தொலைகாட்சி சேனல் போட்டி போட்டாலும் டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியலில் முன்னிலை இடத்திலேயே இருந்து வருகிறது சன் டிவி. அதே சமயத்தில் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனர் கலாநிதி மாறன் பல தொழில்களையும் செய்து வருகிறார். சன் பிக்சர்ஸ் என்ற பெயரில் அவர் தயாரித்த ஏராளமான படங்கள் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை செய்து கலக்கி வருகிறது. அதன் மூலமும் கலாநிதி மாறன் பல கோடிகளை குவித்து வருகிறது.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் ஒரு கிரிக்கெட் டீமின் உரிமையாளராக கலாநிதி மாறன் விளங்குகிறார். அவரின் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கிரிக்கெட் போட்டிகளில் தாறுமாறாக விளையாடி ஸ்கோர்களை குவித்து அதிலும் சாதனை படைத்தது நல்ல வருவாயை எட்டியுள்ளது. அந்த வகையில் சன் குழுமம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனமாக இயங்கி வருகிறது.
இப்படி பல்வேறு வகையிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வரும் கலாநிதி மாறன் சைலண்டாக மற்றும் ஒரு புதிய பிளானுடன் களம் இறங்க உள்ளார் என கூறப்படுகிறது. சன் ஹாலிவுட் என்ற பெயரில் புதிதாக சேனல் ஒன்றை தொடங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த தொலைக்காட்சி சேனலில் 24 மணிநேரமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஹாலிவுட் படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்றும் அதற்கான பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சன் ஹாலிவுட் சேனல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இந்த தகவல் உண்மையாக இருந்தால் சன் டிவி ரசிகர்களுக்கு ஒரு குதூகலம்தான். 24 மணி நேரமும் ஹாலிவுட் படங்களை தமிழில் கண்டுகளிக்க நல்ல ஒரு வாய்ப்பாக அமையும்.