Label Series: ஜெய் நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் ‘லேபிள்’ சீரிஸ்.. இந்த பேருக்கு இப்படி ஒரு அர்த்தமா?
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில கூடிய விரைவில் ரிலீஸாகப்போற சீரிஸ் 'லேபில்'. பிரபல நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் நடித்துள்ள இந்தத் தொடரை பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் வக்கீல் சூட் உடன் ஜெய் நிற்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இச்சூழலில் தங்கள் சீரிஸ் டைட்டிலை விளம்பரப்படுத்தும் நோக்கில் லேபிள் டீம் ரெடி செய்துள்ள வீடியோ கவனமீர்த்துள்ளது. “லேபிள்னா என்ன” என பொதுமக்களிடம் இவர்கள் கேட்க, அதற்கு பொதுமக்கள் தந்த பதிலும் வைரலாகி வருகிறது.
பொது மக்களிடம் லேபிளுக்கு அர்த்தம் கேட்க, அவர்கள் அனைவரும் போஸ்டர், பாட்டில்ல, நோட்ல ஒட்டற லேபிள் என பதில் சொல்கிறார்கள். ஆனால், இந்த வீடியோவில் வட சென்னை மக்கள் லேபிளுக்கு உண்மையான அர்த்தம் சொல்லிருக்கிறார்கள். “லேபிள் என்பது ஒரு பிராண்ட். அது ஒரு மனிதனுக்கான அடையாளம். க்ரைமில் பெரிய ஆளையும், பெரிய பெரிய சம்பவங்கள் பண்ணின ஆளையும் தான் லேபிள்னு சொல்வாங்க. ஏரியாவில பெரிய ஆள தான் லேபிள்னு சொல்லுவாங்க” எனக் கூறப்பட்டுள்ளது. லேபிளுக்கும் இந்த சீரிஸுக்கும் என்ன சம்பந்தம் என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.
கனா படம் மூலம் கவனிக்க வைத்த அருண் ராஜா காமராஜ், முதன்முறையாக இந்த சீரிஸை இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்க, ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர். கூடிய விரைவில டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்த சீரிஸ் ரிலீஸாக உள்ளது.