Bigg Boss Tamil 7: குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? கலக்கல் உடையில் கமல்ஹாசன்.. பிக்பாஸில் இன்று சம்பவம் இருக்கு!
"இது தீர்ப்பு இல்லை, தீர்வு, தீர விசாரித்ததால் வந்த தீர்வு. குற்றம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது உலக நியதி" என கமல் பேசியுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 41ஆவது எபிசோடை எட்டியுள்ளது.
பிக்பாஸ் சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த வாரம் கூச்சல்களும் கலவரமும் பிக்பாஸ் வீட்டை சூழ்ந்தது. பிரதீப் ஆண்டனி ‘பெண்களின் பாதுகாப்பு’ என்பதை சுட்டிக்காட்டப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில், இணையத்தில் இந்த விஷயம் பூதாகரமாகியது.
பிரதீப் வெளியேற்றம் தொடர்பாக பிக்பாஸ் வீட்டார் தொடங்கி கமல்ஹாசன் வரை அனைவரையும் நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சிக்கத் தொடங்க, மற்றொருபுறம் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே கலவரம் வெடித்தது.
மேலும் மாயா - பூர்ணிமா, ஐஷூ ஆகியோர் ஒரு குழுவாகவும், விசித்ரா - அர்ச்சனா - தினேஷ் ஆகியோர் ஒரு குழுவாக பிக்பாஸ் வீட்டில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் ஹவுஸ் வீட்டு மோதல்கள் கடந்து, குழுக்களாக மோதல் வெடித்தது.
பிரதீப்பை அடல்ட் ஜோக் சொல்கிறார், கெட்ட வார்த்தை பேசுகிறார் என்றெல்லாம் சொல்லி வெளியேற்றிய மாயா மற்றும் குழுவினர், தற்போது அதே விஷயங்களை தாங்களும் செய்து பிக்பாஸ் வீட்டை கேலிக்கூத்தாக்குவதாக ரசிகர்கள் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து இந்த வார வீக் எண்ட் எபிசோட் பற்றிய எதிர்பார்ப்பும் , கமல இந்த நிகழ்ச்சியில் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றியும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல்ஹாசன், மாயா, பூர்ணிமாவையும் கேள்வி எழுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கலக்கலான தீபாவளி உடையுடன் வந்து தீர விசாரிப்பதே மெய் என இந்த ப்ரொமோவில் தன் பேச்சைத் தொடங்குகிறார் கமல்.
“இது தீர்ப்பு இல்லை, தீர்வு, தீர விசாரித்ததால் வந்த தீர்வு. குற்றம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது உலக நியதி, குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? அந்தக் கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும்” என கமல்ஹாசன் இந்த ப்ரோமோவில் பேசியுள்ளார்.
View this post on Instagram
பிரதீப் எவிக்ஷனைத் தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களிலும், முன்னாள் பிக்பாஸ் பொட்டியாளர்கள் மத்தியில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் வலுத்த நிலையில், முன்னதாக தான் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் பிரதீப் திரும்புகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மற்றொருபுறம் இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற பூர்ணிமா தான் எவிக்ட் ஆகி வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.