கே.வி ஆனந்த் மகளின் கல்யாணத்திற்கு தங்க நாணயங்களை அனுப்பிய சூர்யா..
மறைந்த இயக்குர் கே.வி ஆனந்தின் மகளின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா தங்க நாணயங்களை பரிசாக அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது
சூர்யா தொடர்ச்சியாக தொலைபேசியின் மூலம் தங்களது குடும்பத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வதாக மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்தின் மனைவி தெரிவித்துள்ளார்.
கே.வி ஆனந்த்
தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து தனித்துவமான கதை சொல்லல் முறையைக் கொண்ட இயக்குநர் கேவி ஆனந்த் . திரைத்துறைக்கு வருவதற்கு முன் கே.வி ஆனந்த் லயோலா கல்லூரியில் காட்சி தொடர்பியல் முடித்த கே.வி.ஆனந்த் பத்திரிகைகளில் ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக வேலை செய்தார். கல்கி, இந்தியா டுடே என மொத்தம் 200 பிரபலமான இதழ்களில் இவர் எடுத்த புகைப்படங்கள் முகப்புப் படமாக வெளிவந்திருக்கின்றன. பல முதலமைச்சர்களை அருகில் இருந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.
பின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் கே.வி.ஆனந்த். அமரன், கோபுர வாசலிலே, மீரா உள்ளிட்ட படங்களில் உதவியாளராக இருந்த கே.வி.ஆனந்த், பி.சி.,யின் பரிந்துரையின் பேரில் மலையாளப் படமான தென்மாவின் கொம்பத் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார் கே.வி ஆனந்த். தமிழில் கே.வி ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியப் படம் காதல் தேசம். இதனைத் தொடர்ந்து ஷங்கர் போன்ற பல முதன்மையான இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறார்.
கனா கண்டேன் திரைப்படத்தின் வழியாக. இயக்குநராக கே வி ஆனந்த் அறிமுகமானார்.ஒரு இயக்குனராக கே.வி ஆனந்தின் கதை தேர்வு என்றும் புதுமையானதாக இருந்திருக்கிறது. அயன் , மாற்றான் , அனேகன், காப்பான், என இவரது படங்கள் கதையாகவோ, மேக்கிங்காகவோ ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை என்டர்டெயின் செய்யத் தவறியதில்லை. குறிப்பாக சூர்யாவுடன் இவர் இயக்கிய அயன் படம் இன்று வரை ஒரு சிறந்த கடத்தல் சார்ந்து எடுக்கப்பட்ட படங்களில் டாப்பில் இருக்கிறது.
திடீர் மரணம்
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 31 ஆம் தேதி கே.வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறப்பு தமிழ் சினிமாவில் பலருக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. குறிப்பாக அயன் , மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களில் கே.வி ஆனந்துடன் இணைந்து பணியாற்றிய நடிகர் சூர்யாவுக்கு அவருடன் நெருங்கிய நட்பு இருந்து வந்தது.
தற்போது இயக்குநர் கே.வி ஆனந்தின் மனைவி நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ள தகவல் ஒன்று இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தனது கணவரின் இறப்புக்குப் பின் சூர்யா தொடர்ச்சியாக அவரின் மகள்களின் படிப்பை பற்றி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து வருவதாகவும் தனது மூத்த மகளின் திருமணத்திற்கு அவர் தங்க நாணயங்களை தனது மேனேஜர் வழியாக சூர்யா கொடுத்தனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த செயல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது