Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 47 படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்திற்கு 'சீன்' (Scene) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், சமூக வலைதளங்களில் இந்த தலைப்பு வேகமாக பரவி வருகிறது. இதனால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
கருப்பு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருப்பு திரைப்படம் வசூல் மற்றும் வரவேற்பு ரீதியாக வெற்றி பெற்றதால், சூர்யா தனது அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வருகிறார். அதனால் அவரது ஒவ்வொரு புதிய அறிவிப்பும் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
சூர்யா 47 படப்பிடிப்பு நிறைவு
தற்போது மலையாளத்தின் முன்னணி இயக்குநரான ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 47-வது திரைப்படம் உருவாகி வருகிறது. ரொமாஞ்சம், ஆவேஷம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஜீத்து மாதவன், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். ழகறம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இந்த படத்தின் மூலம் சுஷின் ஷியாமும் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், சூர்யா 47 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு மேக்கிங் வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிங்கம் படத்தைத் தொடர்ந்து சூர்யா இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஆனால் சீரியஸான ரோலாக இல்லாமல் இப்படத்தில் ஆக்ஷன் காமெடி இரண்டு கலந்திருக்கும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சூர்யா 47 டைட்டில்
சூர்யா 47 படத்திற்கு 'சீன்' என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதைக்கு ஏற்ற வகையில் இந்த தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அல்லது படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒருபுறம் கருப்பு படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் சூர்யா ரசிகர்கள், மறுபுறம் ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தையும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். டைட்டில் குறித்த தகவலும் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதிகாரப்பூர்வ டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















