தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மும்பை வீட்டில் தனது நிகழ்ந்த அமானுஷ்யமான நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மும்பை வீட்டில் சந்தித்த விசித்திரமான அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனித உருவ பொம்மை தானாகவே இடம் மாறியதாகவும், இதனால் அச்சமடைந்த அவர் அந்தப் பொம்மையையே அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
நேஹா துபியா மற்றும் அங்கத் பேடி இணைந்து நடத்தும் 'டபுள் டேட்' (Double Date) என்ற யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ருதி ஹாசன், தனது வாழ்க்கையில் சந்தித்த விசித்திரமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தானாக நகர்ந்த மனித உருவ பொம்மை
இந்த பேட்டியில் பேசிய ஸ்ருதி ஹாசன் "எனக்கு சில இடங்களில் நிலவும் விசித்திரமான ஆற்றல்களை உணர முடியும், சென்னையில் உள்ள எனது வீட்டில் அத்தகைய உணர்வு ஏற்பட்டதில்லை ஆனால் மும்பையில் உள்ள எனது வீட்டில் ஏதோ சரியில்லை என்ற உணர்வு தொடர்ந்து இருந்தது
அந்த வீட்டில் ஃபியோனா (Fiona) என்று பெயரிடப்பட்ட மனித உருவ பொம்மை ஒன்றை வைத்திருந்தேன். அலமாரியில் வைக்க இடமில்லாத கூடுதல் ஆடையை அந்தப் பொம்மைக்கு அணிவித்திருந்தேன். வீட்டிற்கு வரும் நண்பர்கள்கூட அந்தப் பொம்மையைப் பார்த்து வணக்கம் சொல்வது வழக்கம்.
ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மை யாரும் நகர்த்தாமலேயே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைகளில் காணப்பட்டது. இது 2007-ஆம் ஆண்டு வெளியான 'ஐ ஆம் லெஜண்ட்' (I Am Legend) திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல இந்த அனுபவம் எனக்கு இருந்தது. அந்தப் பொம்மையைப் பார்த்து, 'உன்னை யார் நகர்த்தியது?' என்று எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்.
இதனால் நாம் ரொமப் பயந்துவிட்டேன் . பின் அனுமன் சாலிசாவை ஒலிக்கவிட்டு, கையில் உப்பை வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்தேன். இறுதியில் அந்தப் பொம்மையைத் தனித்தனியாகப் பிரித்து வீட்டிலிருந்து அகற்றியதுடன், எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கான சடங்குகளையும் செய்தேன். அதன் பிறகு எனது வீட்டில் அமைதி நிலவியது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதே உரையாடலில் தனது ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் விக்கா (Wicca) வழிபாட்டு முறைகள் மீதான ஆர்வம் குறித்தும் ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார். மத நம்பிக்கைகள் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தபோதிலும், தனது குடும்பத்திலேயே தான் மட்டுமே அதிக ஆன்மீக நம்பிக்கை கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதி ஹாசனின் இந்த விசித்திரமான அனுபவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















