Puneeth Rajkumar | தானம் செய்யப்பட்ட புனீத் ராஜ்குமாரின் இரு கண்களால், நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது எப்படி?
கர்நாடக மாநிலத்தில், கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமாரின் தானமளிக்கப்பட்ட இரண்டு கண்கள் மூலம் ஒரே நாளில் நான்கு பேருக்கு கண்களைப் பொறுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் கடந்த வாரம் தன்னுடைய வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, நெஞ்சுவலி காரணமாக கிழே சுருண்டு விழுந்தார். இதை தொடர்ந்து, மிகவும் ஆபத்தான நிலைமையில் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.
புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார், 48 இலவச பள்ளிக்கூடங்கள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், சுமார்1800 மாணவ, மாணவியரின் கல்வி, என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் ரியல் லைஃப் சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிருடன் இருக்கும்போது பல்வேறு உதவிகளைச் செய்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார், தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற ஓர் பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களும் பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கண்கள், சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கொண்ட 4 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அதன் மூலம் புனித் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலேயே முதல் முறையாக, புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டு கண்கள் நான்கு பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது கருவிழியை இரண்டு துண்டுகளாக்கி, முதல் பாதி ஒருவருக்கும், மற்றொரு பாதி இரண்டாமவருக்கும் பொருத்தப்பட்டது. இதுபோல நான்கு பேருக்கு கண்பார்வை கிடைத்துள்ளது.
வழக்கமாக தானம் பெறுவோர் மிகச் சரியாகக் கிடைப்பது சவாலாக இருக்கும். ஆனால் இம்முறை எல்லாமே தானாகவே அமைந்துவிட்டது. ஒருவரது கண்விழி மிக நல்ல முறையில் இருந்தால் அதன் மூலம் நான்கு பேருக்கு கண்தானம் அளிக்கலாம். நான்கு பேரும் தற்போது நன்றாக இருக்கிறார்கள். அதே வேளையில் புனீத் ராஜ்குமாரின் கண்களின் வெள்ளைப் பகுதியும் எடுக்கப்பட்டு, அவை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிலிருக்கும் லிம்பெல் செல்கள் வளர்க்கப்பட்டு, அவை தீக்காயம் உள்ளிட்டவற்றால் கண்விழி பாதிக்கப்படுவோருக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ராஜ்குமாரின் குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் வகையில், இந்த அறுவை சிகிச்சைகள் மருத்துவமனை சார்பில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்று நாராயணா நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் புஜங் ஷெட்டி தெரிவித்துள்ளார்.