Pongal Songs: "தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது" பொங்கலை அலங்கரிக்கும் தமிழ் சினிமா பாடல்கள்!
Pongal 2024: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பொங்கல் பண்டிகை தொடர்பான பாடல்களை காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பொங்கல் பண்டிகை தொடர்பான பாடல்களை காணலாம்.
மகாநதி (1994)
பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது 1994 ஆம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் இடம்பெற்ற “பொங்கலோ பொங்கல்” பாடல் தான். அதிலும் “தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது” என்ற முதல் பாடலோ அல்லது இந்த பாடலின் இசை இல்லாமலோ பொங்கல் பண்டிகை நிறைவு பெறாது. இந்த பாடலை வாலி எழுத சித்ரா பாடியிருந்தார்.
போக்கிரி (2007)
2007 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த போக்கிரி படத்தில் “போக்கிரி பொங்கல்” பாடல் இடம் பெற்றது. இது எல்லா பொங்கல் திருவிழாவிலும் தவறாமல் ஒலிக்கும். கபிலன் எழுதிய இந்த பாடலை நவீன் பாடியிருப்பார். அதுவும் அந்த பாடல் வரி வரும்போது விஜய் போடும் ஒரு “சிக்னேச்சர் ஸ்டெப்” மிகவும் பிரபலமானது.
தளபதி (1991)
1991 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினி, மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் “காட்டுக்குயிலு” என்ற பாடல் மிகவும் பிரபலம். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடலை வாலி எழுதியிருந்தார். இதில் “தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்” பொங்கலின் மகிமையை வெளிப்படுத்தும்.
வருஷம் 16 (1989)
ஃபாசில் இயக்கத்தில் கார்த்திக், குஷ்பூ, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “வருஷம் 16”. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்த நிலையில் இதில் இடம் பெற்ற “பூ பூக்கும் மாசம் தை மாசம்” பாடல் பொங்கலை குறிப்பிடாவிட்டாலும் அது பிறக்கும் தை மாதத்தை குறிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருக்கும். மேலும் பாடலின் ஆரம்பமே, “பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…” என்றே தொடங்கும்.
விவசாயி (1967)
1967 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் “விவசாயி”. இந்த படத்தி கே.ஆர்.விஜயா, எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ் என பலரும் நடித்த நிலையில் இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். இப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய “கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” பாடல் விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
இந்த படத்தில் இடம் பெற்ற “தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்” பாடல் முழுக்க முழுக்க பொங்கல் பண்டிகையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும். கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்பாடலை கவிஞர் மருதகாசி இயக்கியிருப்பார். டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார்.