முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
ரசிகர்களுடன் ‘தி பாரடைஸ்’ படத்தின் பிரீமியர் காட்சியை பார்க்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு நடிகர் நானி வேண்டுகோள்.

தனது புதிய படமான ‘The Paradise’ படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கில் பார்க்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு நடிகர் நானி வேண்டுகோள் வைத்துள்ளார்.
நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள ‘The Paradise’ திரைப்படம் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தசரா’ படத்துக்குப் பிறகு நானி - ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தில் காயடு லோஹர், ராகவ் ஜுயல், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘The Paradise’ படத்துக்கு தெலங்கானாவில் செப்டம்பர் 23-ம் தேதி சிறப்பு பிரீமியர் காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பிரீமியர் காட்சியில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை நானி முதலமைச்சரிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு கோரிக்கை
நானி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமாவை நேசிக்கும் ஒரு ரசிகனாகவும், சிறு வயது முதலே சினிமாவை அதன் சிறந்த வடிவில் ரசித்து வருபவராகவும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, சினிமாவை அதே அளவு நேசிக்கும் மக்களுடன் சேர்ந்து பார்ப்பதில்தான் அதன் உண்மையான அனுபவம் இருக்கிறது. ஹைதராபாத்தில் அந்த அனுபவத்துக்கு RTC X Roads தனி இடம் கொண்டது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ள ‘The Paradise’ பிரீமியர் காட்சியை RTC X Roads பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். “யாருக்காக இந்தப் படத்தை உருவாக்கினோமோ, அந்த ரசிகர்களுடன் அமர்ந்து அவர்களின் எதிர்வினையை அனுபவிப்பதில்தான் ஒரு திரைப்படத்தை உருவாக்கியதன் முழுமையான திருப்தி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதற்காக நடைமுறையில் உள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவோம் என்றும், பாதுகாப்புதான் தங்களது முதல் முன்னுரிமை என்றும் நானி தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஒளிப்பதிவுத் துறை அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட் ரெட்டி மற்றும் தெலங்கானா காவல்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
1984-85 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். ஒரு சமூகத்தின் வாழ்வியல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஆக்ஷன் டிராமாவாக படம் உருவாகியுள்ளது. படத்தின் மொத்த ஓட்ட நேரம் சுமார் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















