“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”.

வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிகழ்வில் பேசிய படக்குழுவினரின் உரைகள் கீழ்வருமாறு
நடிகை அதுல்யா சந்திரா
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ எனக்கு தமிழில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம். இந்தப் படத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். விதார்த், சந்தோஷ் பிரதாப், தேஜு, கலையரசன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சசிகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகள். மேலும், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”
இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.
அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார். ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், ஒளிப்பதிவாளர் உதய்குமார், எடிட்டர் ராமர், சவுண்ட் டிசைனர் சதீஷ், கலரிஸ்ட் பிரசாந்த், டிசைனர் சந்துரு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை உருவாக்கியதில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் முழு படக்குழுவினரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
நடிகர் கலையரசன் பேசியதாவது
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது. இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன. தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விதார்த், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், தேஜு, அதுல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர்.
‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
நடிகர் விதார்த் பேசியதாவது
“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.
இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















