சாலமன் பாப்பையா மறைவுக்கு உள்ளூர் மக்கள் கூட பெருசா வரல.. ஆதங்கப்பட்ட மதுரை முத்து!
தீபாவளி, பொங்கல் வந்து விட்டாலே பட்டிமன்றம் பார்ப்பதே திருவிழாவாக இருந்தது. சாலமன் பாப்பையா என்ன மாதிரியான தீர்ப்பு சொல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது என மதுரை முத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இறுதி ஊர்வலத்தில் உள்ளூர் மக்கள் கூட பங்கேற்கவில்லை என நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 11ம் தேதி தனது 90 வயதில் காலமானார். உலகளவில் 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ள சாலமன் பாப்பையாவுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் கல்விப் பணிக்காக கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசின் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாலமன் பாப்பையா மறைவைத் தொடர்ந்து அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நகைச்சுவை மேடை பேச்சாளர் மதுரை முத்து நேர்காணல் ஒன்றில் சாலமன் பாப்பையா பற்றி பல விஷயங்களைப் பேசியுள்ளார்.
தீபாவளி, பொங்கல் வந்து விட்டாலே பட்டிமன்றம் பார்ப்பதே திருவிழாவாக இருந்தது. சாலமன் பாப்பையா என்ன மாதிரியான தீர்ப்பு சொல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குக்கிராமத்திற்கும் சென்று பட்டிமன்றம் நடத்தி இளைஞர்கள், பெண்கள் அனைவருக்கும் கொண்டு சேர்த்தார். தன்னுடைய வட்டார வழக்கில் அழகாக பேசுவது தான் எல்லாருக்கும் சாலமன் பாப்பையாவை பிடித்துபோனது என சொல்லலாம்.
கடைசிக் காலத்தில் என்னுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார். என் பாப்பா நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க செல்லும்போது சிலப்பதிகார உரை எழுதிக் கொண்டிருந்தார். தனக்கு பிடித்த பாரதியார் நினைவு நாளில் காலாமாகி விட்டார். தனக்கு வயதாகி விட்டது என கொஞ்சம் கூட சலித்தது இல்லை. தமிழ் மீது ஈர்ப்புக் கொண்டவர், 62 ஆண்டுகள் தமிழுக்காகவே வாழ்ந்தவர் விமான நிலையத்தில் பெட்டியோடு வந்தால் மக்கள் பார்க்க மட்டும் தான் செய்தார்கள். வயது மூப்புக்காகவாவது அவருக்கு உதவி செய்திருக்கலாம். அதை செய்யவில்லை.
அதேபோல் சாலமன் பாப்பையா இறந்தபோது உடலை எடுத்துக் கொண்டு ஊர்வலம் செல்லும்போது மக்கள் வர வேண்டும். குறைந்தப்பட்சம் மதுரை மக்களாவது வந்திருக்க வேண்டும். எங்கெங்கோ அவருடன் பயணம் செய்த கவிஞர்கள் வயதானாலும் வந்தார்கள். ஆனால் உள்ளூர் மக்கள் வரவில்லை. நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். சாலமன் பாப்பையா பெரிய அளவில் பணம் சேர்க்கவில்லை. எளிமையாகவே காலமாகி விட்டார். கடைசியாக உதவியாளர் ராஜரத்தினத்திடன், நான் இறந்த பிறகு போடப்படும் மாலையை ரோட்டில் போட்டு விடாதீர்கள். யாரும் கீழே விழுந்து விட்டுவார்கள். வெடி போடாதீர்கள். நம் இறப்பு மற்றவர்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.
சாலமன் பாப்பையா அப்பா சாப்பாட்டுகாக மதம் மாறியவர். குக்கிராமத்தில் இருந்த அவரது அப்பா ஆங்கிலேயரிடம் போய் சாப்பாடு கேட்க, மதம் மாறினால் வேலை, சாப்பாடு கிடைக்கும் என அங்கிருந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். சாலமன் பாப்பையா இந்து மதப்படி தன் இறுதிச்சடங்கு நடக்க வேண்டும் என உயில் எழுதி வைத்ததே பலருக்கும் தெரியாது என மதுரை முத்து தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















