(Source: ECI/ABP News/ABP Majha)
Pa. vijay Birthday special : மூத்தோரின் பக்குவம்... இளையோரின் குறும்பு... கவிஞனின் செந்தமிழ்...பா.விஜய்!
1990கள் காலக்கட்டம் என்பது தமிழ் சினிமாவுக்கு முக்கியமான காலக்கட்டம். 70, 80களில் கோலிவுட்டில் எழ ஆரம்பித்த புதிய அலைகள் 90களில் தீவிரமாக அடித்தன.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் பலர் வந்து சென்றாலும் சிலர் மட்டுமே காலத்தில் நிலைத்து நிற்பர். கண்ணதாசன் தொடங்கி நா. முத்துக்குமார்வரை அந்த பட்டியல் நீளும். அவர்களில் மிக முக்கியமான பாடலாசிரியர் பா. விஜய்.
1990கள் காலக்கட்டம் என்பது தமிழ் சினிமாவுக்கு முக்கியமான காலக்கட்டம். 70, 80களில் கோலிவுட்டில் எழ ஆரம்பித்த புதிய அலைகள் 90களில் தீவிரமாக அடித்தன. குறிப்பாக இசையில் ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், தேவா என பலர் உருவாக பாடல்கள் எழுதுவதற்கும் புதிய படை ஒன்று கிளம்பியது.
அந்த படையில் முக்கிய தளபதி பா. விஜய். வாலிப கவிஞர் வாலியிடம் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினாலும் தனியாக பாடல்கள் எழுத ஆரம்பித்ததும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
முக்கியமாக கருமையை கண்டு அனைவரும் ஒருவித ஒவ்வாமை கொண்டிருந்த சமயத்தில் பா. விஜய்யின் மை “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்று பேசியது. அதன் பிறகு விஜய்யின் பாடல்களையும், கவிதைகளையும் ஒட்டுமொத்த தமிழ்நாடும், கவிஞர்களின் மேடைகளும் பேசின.வைரமுத்து புதுக்கவிதையை புகுத்தினார், வாலி அனைத்து விதமான தமிழையும் எழுதினார் என்றால் பா. விஜய் மூத்தவருக்கு உரிய பக்குவத்தையும், இளையஞருக்கு உரிய குறும்பையும், கவிஞனுக்கு உரிய செந்தமிழையும் தனது பாடல்களில் எழுதினார்.
பாடல்களுக்கு தேசிய விருது என்றாலே வருடா வருடமோ இல்லை சில வருடங்களுக்கு ஒரு முறையோ வைரமுத்து வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் இல்லை அவரது தமிழ் அப்படி பெற்றது.இளைய தலைமுறை பாடலாசிரியர்கள் எழுத வந்தபோது முதல்முறையாக தேசிய விருது பெற்று அந்தத் தலைமுறை மீது பலரது கவனத்தை திருப்பினார்.
யுவன் ஷங்கர் ராஜா - நா. முத்துக்குமார் கூட்டணி எவ்வளவு ரம்யங்களை ரசிகர்களுக்கு அளித்திருக்கிறதோ அதே அளவு ரம்யங்களை யுவன் - பா. விஜய் கூட்டணியும் கொடுத்திருக்கிறது. வாழ்க்கைக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய பாடல்கள் எழுதுவது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல. சிறிது பிசகினாலும் அந்தப் பாடல் கலைத்தன்மையை இழந்து பிரசார தொனிக்குள் சிக்கிக்கொள்ளும். ஆனால், பா. விஜய் அந்தவகை பாடல்கள் எழுதுவதில் கைதேர்ந்தவர். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடல் சீரியஸ் மோடில் இருந்து வாழ்க்கைக்கு ஊக்கம் அளிக்கும். ஜூன் போனால் ஜூலை காற்றே பாடல் போகிறபோக்கில் இலகுவாக ஊக்கம் அளிக்கும். பா. விஜய்யால் மேடை போட்டும் ஊக்கமளிக்க முடியும், நதி மேல் இலையாய் மிதந்துகொண்டும் ஊக்கமளிக்க முடியும்.
இந்த பூமிப்பந்துக்குள் சிக்கிக்கொண்டு பல விஷயங்களை தங்களது தலைக்குள் ஏற்றி திரிபவர்களுக்காகவே விஜய் இப்படி ஒரு வரி எழுதியிருப்பார், “இந்த பூமி பந்து நம் கூடை பந்து”. தமிழை காதலித்த கவிஞர்களுக்கு மத்தியில் முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் என்று தமிழுக்கு முத்தம் கொடுத்து அந்த பாடலில் பல தமிழ்களை பிரசவிக்கும் துணிச்சல் பா. விஜய்க்கு இருந்தது.
தமிழ் மொழியில் அர்ச்சனை வேண்டும் என்ற விஷயம் தலையெடுக்க ஆரம்பிக்கும்போதே, “தமிழில் பேசும் தமிழ் குலம் இருக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு” என்று சினிமாவில் பேனா சுழற்றியவர் பா. விஜய்.
சூப்பர் ஸ்டார் என்ற பிம்பம் உடையக்கூடாது, தத்துவங்களை எளிதாக சொல்ல வேண்டும், தமிழையும் சிதைக்கக்கூடாது என ரஜினிக்கு பாடல் எழுதும் வேலை பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதை லாவகமாக செய்தவர்களில் விஜய்யும் ஒருவர். குறிப்பாக, ரஜினிக்கு எழுதப்படும் பாடல் வரிகளில் வேறு யாரையும் பொறுத்திப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவருக்காகவே வரிகள் வார்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் ரஜினிக்கு பா. விஜய், அத்திந்தோம் பாடலில் “பாட்டுல பலகோடி நெஞ்ச நானும் புடிச்சேன்” என்று ஒரு வரி எழுதியிருப்பார். அது ரஜினிக்கு மட்டும் பொருந்திப்போவதைவிட பா. விஜய்க்கும் பொருந்திப்போகும்.
ஆம், ரஜினி மட்டுமல்ல பா. விஜய்யும் பாட்டுல பல கோடி நெஞ்சங்களை பிடித்தவர். தற்போது அவர் இயங்கிக்கொண்டிருந்தாலும் முன்னர் போலவே அவர் தீவிரமாக பாடல்கள் எழுத வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில் பாடல்கள் தளத்தில் விழுந்திருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் திறன் படைத்த கவிஞர்களில் பா. விஜய்யும் ஒருவர். இன்று அவரது பிறந்தநாள்... வாழ்த்துக்கள் பா.விஜய்!