எடப்பாடிக்கு எதிராக பேசியதால் 9 வழக்குகள்..இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறேன்...நடிகர் கருணாஸ் வேதனை
தன் மீது தொடரப்பட்ட 9 வழக்குகளுக்காக இன்றுவரை தான் போராடி வருவதாக நடிகர் கருணாஸ் என்ன விலை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ், சாமானிய மக்களின் பிரச்சினைகள், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
கருணாஸ் , நிமிஷா சஜயன் நடித்துள்ள என்ன விலை திரைப்படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமூகத்தில் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கருணாஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து உணர்ச்சிகரமாக பகிர்ந்துகொண்டார்.
எடப்பாடியை எதிர்த்து பேசியதால் 9 வழக்குகள்
அப்போது பேசிய கருணாஸ், “ஒரு சாமானிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய அவனுடைய மான மரியாதைக்கு என்ன வேலை? எனக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் எல்லாரும் நன்றாக அறிந்திருப்பீர்கள்.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து நான் கேள்வி கேட்டதற்காக, ஒரு கூட்டத்தில் என் மீது 9 வழக்குகள் பொய்யாகப் போடப்பட்டது. என்னால் அதை கோர்ட்டில் இன்று வரை வெளியே வர முடியவில்லை இன்றுவரை சார்ஜ்ஷீட் போயிட்டு இருக்கு. கோர்ட்டுக்கும் பாதி வழக்கு வரவே இல்லை.
ஆனால் அன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் உங்களுக்கு தெரியும். நான் 2009-ல் இருந்து இன்றுவரைக்கும் ஒரு அமைப்பு நடத்துகிறேன். கருணாஸ் மீது எத்தனை வழக்கு இருக்குன்னு காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் எல்லாம் உட்கார்ந்து தேடினாங்க. ஆனால் என் மீது கேஸே இல்லை.
அப்ப கேஸே இல்லை என்கிறேன். ஒரே ஒரு கேஸ் இருந்தது. இங்கே புளியம்பட்டியில் ஒருவர் என்னை தாக்குறாங்க. அதில் ஏற்பட்ட பிரச்சினையில் என் பசங்களுக்கும் அவனுக்கும் தகராறு. அதுக்கு எனக்கு சம்பந்தமே இல்லை. பாதிக்கப்பட்டவன் நான். இரண்டு வருடங்கள் கழித்து இவர்களுக்கு தேவைப்படும் போது என் பெயரையும் அதில் சேர்த்துக்கொண்டார்கள்.
இதில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதை என்னால் புரிய வைக்க முடியும். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. ஏன் இன்னும் சொல்லப்போனால், இந்த வழக்குகளுக்காக என்னுடைய பாஸ்போர்ட் கூட ஒரு வருஷம் முடக்கப்பட்டு இருந்து, நான் கோர்ட்டில் போய்தான் அந்த பாஸ்போர்ட்டை வாங்கினேன். இது என்னுடைய நிலைமை.
மக்களுக்காக குரல் கொடுப்பேன்
நான் ஒரு நடிகன். உங்களுக்கு தெரியும். என்னைப் பற்றி எல்லாமே உங்களுக்கு தெரியும். எனக்கே இதுதான் நிலைமை என்றால், சாதாரணமாக கடைக்குள் அஞ்சு காசு, பத்து காசு எடுத்து சாப்பிடுகிற ஒருவருடைய நிலைமை என்ன?
மக்கள் தியேட்டரில் போய் வைத்துக் காசு கொடுத்து படம் பார்க்கும் காசில்தானே எங்களுக்கு வருமானம் வருகிறது. அதை வைத்துத்தானே நடிகர், கேமராமேன் எல்லாருக்கும் காசு கொடுக்கிறார்கள். அப்படி இருக்கிறபட்சத்தில் அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது, என்னைப் பொறுத்தவரை நான் குரல் கொடுப்பேன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















