பிரேமம் இயக்குநர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? ஜேசன் சஞ்சய் சொன்ன காரணம்!
பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து ஜேசன் சஞ்சய் விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், தனது படத்தில் நடிக்க அழைத்தபோதும் அந்த வாய்ப்பை ஜேசன் சஞ்சய் ஏற்கவில்லை. அந்த வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணம் குறித்து ஜேசன் சஞ்சய் தற்போது தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ பண்டிட், அன்பு தாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன், ஹெய்ஸ்ட், காதல், நட்பு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த படமாக சிக்மா உருவாகியுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநராக அறிமுகம்
ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் இயக்குநராக களமிறங்கியுள்ளார். இதற்கு முன்பே அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன. அதில் ஒன்றுதான் பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வழங்கிய வாய்ப்பு. அந்தப் படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் ஜேசன் சஞ்சய் பேசியுள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ?
இதுகுறித்து அவர் கூறுகையில், “அல்போன்ஸ் சார் என்னை அணுகியபோது எனக்கு சுமார் 20 வயது. அப்போது நான் படித்துக்கொண்டிருந்தேன். அவர் இளம் வயதினரை மையமாக வைத்து ஒரு கதையை எழுதியிருந்தார். எங்கோ அவர் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அதன் பிறகு அவருடைய குழுவினர் என்னை அணுகினர். அந்த நேரத்தில் சினிமாவை என்னுடைய தொழிலாகத் தேர்வு செய்வது குறித்து நான் எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை. எனக்கு என்ன திறமை இருக்கிறது, எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதையே நான் கண்டறிந்துகொண்டிருந்தேன். அதனால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நான் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அவருடைய கதையை முழுமையாகக் கேட்கத் தயாராக இல்லாமல், பின்னர் அவரிடம் வேண்டாம் என்று சொல்வதை நான் விரும்பவில்லை. அதனால் என்னைவிட இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமான ஒரு நடிகரை அவர் கண்டுபிடித்துக்கொள்வார் என்று அவரிடம் தெரிவித்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர் என்னை தனது படத்துக்காகத் தேர்வு செய்தது பெருமையாக இருந்தது. அது எனக்கு எப்போதும் சிறப்பான நினைவாக இருக்கும்” என்றும் ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.
கனடாவில் திரைப்பட உருவாக்கம் தொடர்பான படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், இயக்குநராக வேண்டும் என்ற தனது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அங்கு உருவான கதையிலிருந்து பின்னர் சிக்மா உருவானது. 120 பக்க திரைக்கதையை முதலில் எழுதிய அவர், அதன் ஒரு பகுதியை குறும்படமாக உருவாக்கி தன்னால் இயக்குநராக என்ன செய்ய முடியும் என்பதை சோதித்துப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















