ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
Jailer 2 : ஜெயிலர் 2 படத்திலிருந்து சுமார் 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் ரன் டைம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்துக்கான சென்சார் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன. படத்துக்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் இறுதி ரன் டைம் 165 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
100 நிமிட காட்சிகள் நீக்கம்
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்துக்காக படமாக்கப்பட்ட மொத்த ஃபுட்டேஜில் இருந்து சுமார் 100 நிமிடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் கொண்ட பதிப்பில் இருந்து ஏராளமான காட்சிகள் வெட்டப்பட்டதாகவும், மீதமுள்ள காட்சிகளுடன் படத்தை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங்கில் கதையின் வேகம் மற்றும் திரைக்கதையின் தேவைக்கு ஏற்ப சில காட்சிகள் நீக்கப்படுவது வழக்கம். ஆனால் சுமார் 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி காட்சிகள் இருக்குமா?
‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சூரஜ் வெஞ்சாரமூடு, மிர்னா, ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடம் விஜய் சேதுபதியும் படத்தில் ஒரு சிறு கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் நேரம் கருதி இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது நீக்கப்பட்ட 100 நிமிடங்களில் விஜய் சேதுபதியின் காட்சிகளும் அடக்கமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. விஜய் சேதுபதியின் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து படக்குழுவினர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இடம்பெறும் படத்தில் கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதா அல்லது ரன் டைமை கட்டுக்குள் வைக்க வேறு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. தற்போது உறுதி செய்யப்பட்ட தகவலின்படி, ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















