Tamil Patriotic Songs: "இந்திய நாடு என் நாடு" : சுதந்திரத்தை போற்றிய டாப் கிளாஸ் தமிழ் பாடல்கள்!
Tamil Movies Patriotic Songs: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் தமிழில் வெளியான திரைப்பட பாடல்களை கீழே காணலாம்.
இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நாட்டின் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 78வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் நாட்டின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளது. ஏராளமான பாடல்களும் நாட்டின் சுதந்திரத்தை போற்றும் வகையில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் சுதந்திரத்தை போற்றும் மிகவும் புகழ்பெற்ற பாடல்களை கீழே காணலாம்.
இந்திய நாடு என் நாடு:
சுதந்திர போராட்ட தியாகிகள் பலரின் வாழ்க்கை வரலாற்றில் அவர்களது கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி. இவரது நடிப்பில் 1973ம் ஆண்டு நகைச்சுவையாக வெளியான படம் பாரத விலாஸ். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பு இந்திய நாடு என் நாடு எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை போற்றும் வகையில் இந்த பாடலின் வரிகள் இடம்பெற்றிருக்கும். மேலும், பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.
தாயின் மணிக்கொடி:
நாட்டுப்பற்றை போற்றும் வகையிலான படங்களில் கதாநாயகனாக அதிகளவில் நடித்தவர் அர்ஜூன். 1994ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெய்ஹிந்த். இந்த படத்தில் இடம்பெற்ற தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி பாடல் மிக மிக புகழ்பெற்ற நாட்டுப்பற்று மிக்க பாடல்களில் ஒன்றாகும். உணர்ச்சிப் பொங்கும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.
அச்சம் அச்சமில்லை:
1995ம் ஆண்டு சுஹாசினி இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்திரா. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல் அச்சம் அச்சம் இல்லை என்ற பாடல். இது சுதந்திர போராட்ட தியாகத்தை போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல் ஆகும். இந்த பாடலை வைரமுத்து எழுதியிருப்பார்.
தமிழா தமிழா:
இந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ரோஜா. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல் தமிழா தமிழா பாடல். வைரமுத்து எழுதிய தமிழா தமிழா நாளை நம் நாளே என்ற இந்த சுதந்திர பாடலை ஹரிஹரன் மனதை வருடும் வகையில் பாடியிருப்பார்.
தாய் மண்ணே வணக்கம்:
இன்று பலரும் சுதந்திரத்தற்காக பாடும் புகழ்பெற்ற பாடல்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் ஏராளமான சுதந்திர பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரத்தை போற்றும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல் தாய் மண்ணே வணக்கம். இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்:
நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரும், ஆங்கிலேயர்களுக்கு முதன்முதலாக நாட்டில் கப்பல் வர்த்தகத்தில் ஈடுபட்டவருமானவர் வ.உ.சிதம்பரனார். அவரது புகழைப் போற்றும் வகையில் உருவான கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்றது என்று தணியும் இந்த சுதந்திர தாகம் பாடல். திருச்சி லோகநாதன் குரலில் வெளியான இந்த பாடல் அன்றைய காலத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
வந்தே மாதரம்:
இயக்குனர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாரதி. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் வந்தே மாதரம் என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாரதியார் பாடுவது போல இந்த பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.
இந்தியன் படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான கப்பலேறி போயாச்சு மற்றும் அனிருத் இசையில் வெளியான இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற பாரா வருவது ஓராட் படையா? பாடல்களும் நாட்டின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடல்கள் மட்டுமின்றி சங்கே முழங்கு, வெள்ளிப்பனிமலை மீது, கப்பலேறி போயாச்சு என்று ஏராளமான பாடல்கள் தமிழில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது.