(Source: ECI/ABP News/ABP Majha)
Thankar Bachan: பிரபலங்கள் உங்களை உயர்த்திவிட்ட மக்களுக்கு நன்றிக்கடன் செய்யுங்கள்... தங்கர் பச்சான் பதிவு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையின் உச்சநட்சத்திரங்கள் களத்தில் இறங்கி உதவி செய்ய அறிவுறுத்தியுள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. ஓயாமல் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் நீர் சூழந்து மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பல்வேறு பொது இடங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை வழங்க தமிழ்நாடு அரசு தொடங்கி தனி நபர்கள் வரை பலர் உதவி வருகிறார்கள்.
கலவையான விமர்சனங்கள்
மறுபக்கம் இணையதளத்தில் தமிழ்நாடு அரசை விமர்சித்து பல்வேறு பதிவுகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. வெள்ள நீர் வடிவதற்கு போதுமான வசதிகளை திமுக அரசு செய்யவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் அரசை விமர்சிப்பதை விட அரசுடன் சேர்ந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த நிலையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பது மற்றொரு தரப்பின் கருத்தாக இருக்கிறது.
ஆதரவு தெரிவிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்துவரை நடிகர் விஷால், சூர்யா, கார்த்தி, விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்கள் மக்களுக்கு தங்களது ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள் . மேலும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
தங்கர் பச்சன் வேண்டுகோள்
இந்நிலையில், சொல்ல மறந்த கதை, அழகி , அம்மாவின் கைபேசி, கருமேகங்கள் கலைகின்றன உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தங்கர் பச்சான் இது தொடர்பாக தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் ”மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.
வேடிக்கை பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும். இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என அவர் கூறியுள்ளார்.
மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல்…
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) December 5, 2023