Director Lingusamy: “இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை உறுதி” .. மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா, தேவயானி, ரம்பா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து ரன்,சண்டகோழி,வேட்டை,பீமா, பையா, அஞ்சான், வாரியஸ் ஆகிய படத்தின் மூலம் கமர்ஷியல் இயக்குநராகவும் உருவெடுத்தார்.
இதற்கிடையில் இயக்குநராக உருவான லிங்குசாமி அவர் “திருப்பதி பிரதர்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதன்மூலம் தீபாவளி, பட்டாளம்,பையா,கும்கி, வழக்கு எண் 18/9, இவன் வேற மாதிரி, கோலிசோடா, மஞ்சப்பை என பல படங்களை சொந்தமாகவும், பிற நிறுவனங்களுடன் இணைந்தும் தயாரித்தார். இதனிடையே 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி தயாரித்து இயக்கிய அஞ்சான் வெளியானது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல் நடித்த உத்தம வில்லன் படம் வெளியானது. இந்த இருபடமும் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், "எண்ணி ஏழு நாள்" என்ற திரைப்படத்தை தயாரிக்க திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தது.
இந்த கடன்தொகையை உரிய காலத்தில் திரும்பச் செலுத்ததாத நிலையில், லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் லிங்குசாமி சம்பந்தப்பட்ட தொகைக்கு காசோலைகள் வழங்கினார். ஆனால் அவை வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதனையடுத்து லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து லிங்குசாமி தரப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்தது. மேலும் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டுமென்ற உத்தரவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட விவகாரம் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.