”உங்களை நம்பிதான்... இதையெல்லாம் செய்க” - திமுக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின்
'வாக்காளர்களின் பெயர், வயது, குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல் என முழு விபரமும் ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டும்'
தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் குறித்த அனைத்து தகவல்களை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்றும், மக்களிடம் கட்டாயம் அரசின் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை கூட்டத்தை திமுக தலைமை கழகம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதில், திருவண்ணாமலையும் தீபமும் போல், திருவண்ணாமலையையும், திமுகவையும் பிரிக்க முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ”வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, போலி வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதா என்பதை முழுதாக சரிபார்க்க வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து திமுக சாதனை எடுத்து கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களை வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரவழைக்க வேண்டும். வாக்காளர்களின் குடும்பத்தில் ஒரு நபராக இருக்க வேண்டும்.
வாக்காளர்களின் பெயர், வயது, குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல் என முழு விபரமும் ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் கழகத்திற்காக ஒதுக்கி நீங்கள் வேலை செய்ய வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
மக்களுக்கு யாருக்கு என்ன தேவையோ அதை பெற்று தர வேண்டும். மக்களின் தேவையை கேட்டு நிறைவேற்றி தர வேண்டும். இதை எல்லாம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்களிடம் எடுத்துரைக்கலாம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர்களிடம் கட்டாயம் கூறியுள்ளேன். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று திமுக சாதனைகளை எடுத்து கூற வேண்டும்.
திமுக திட்டங்களால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்து வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், கலைஞர் உரிமை தொகை, பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம், 13 லட்சம் பெண்களின் கடன் ரத்து உள்ளிட்ட திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. இதை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். ரூ.1000 மகளிர் உரிமை திட்டம் பெண்களை ஈர்த்திருக்கிறது. திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட ரூ.1000 உரிமை தொகை பெற்றுள்ளனர் என்பதை நீங்கள் தான் எடுத்து கூற வேண்டும். உங்களை நம்பி தான் நாற்பதும் நமதே, நாளை நமதே என நாள் சவால் விடுத்து வருகிறேன்” என பேசியுள்ளார்.
மேலும் படிக்க: ”என் நேர்மை பற்றி பேச எல்.முருகனுக்கோ, அண்ணாமலைக்கோ அருகதை இல்லை”.. ஆ.ராசா ஆவேசம்!