Cinema Headlines: ஸ்டார் பட பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்.. ஃபஹத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தமிழ் இயக்குநர்: சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!
ஃபஹத் ஃபாசில் இல்ல, பத்து தல ராவணன்.. புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வசந்தபாலன்!
நடிகர் ஃபஹத் ஃபாசிலை பிரபல இயக்குநர் வசந்தபாலன் புகழ்ந்து தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது. வெயில் படத்தில் தொடங்கி தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவெடுத்தவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் தற்போது மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை பத்து தல ராவணன் என புகழ்ந்து தள்ளியுள்ளார். “ஆவேஷம் படத்தை ரொம்ப ஆசையாக திரையரங்கத்திற்கு சென்று பார்த்தேன். மிகச் சாதாரணமான ஒரு திரைக்கதையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஃபஹத்” எனப் புகழ்ந்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கவினின் ஸ்டார்...முதல் நாள் வசூல் நிலவரம் இதோ
இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார் திரைப்படம் ரூ.12 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளில் ஸ்டார் இந்தியளவில் 2.70 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இன்றும் நாளையும் விடுமுறை நாள்களை முன்னிட்டும், கோடை விடுமுறையை முன்னிட்டும் படத்தின் வசூல் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் தேதி குறிச்சாச்சு...சூரி நடித்துள்ள கருடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விடுதலை திரைப்படத்தின் மூலம் காமெடியனில் இருந்து தேர்ந்த நடிகராக உருவெடுத்துள்ள சூரி, அடுத்தடுத்து ஹீரோவாக களம் கண்டு வருகிறார். சூரி நடிப்பில் அடுத்து வரவுள்ள கொட்டுக்காளி படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், சூரி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள கருடன் படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் உன்னி முகுந்தன், சசிகுமார், சூரி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் மே மாதம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு (Vijayakanth) நேற்று பத்மபூஷண் விருது (Padma Bhushan Award) வழங்கப்பட்ட நிலையில், அவரது நினைவிடத்துக்கு பத்மபூஷண் விருது கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா, “விஜயகாந்துக்கு காலம் தாழ்ந்து கிடைத்தாலும் விருதினை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.