விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு மக்களிசை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தவெக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்த அவரை எதிர்தரப்பு தற்குறிகள் என திட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

முதலமைச்சர் விஜயை புகழ்ந்த எங்களை தற்குறிகள் என சமூக வலைத்தளங்களில் திட்டுவதாக புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு மக்களிசை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தவெக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக, திமுக அரசால் புறக்கணிக்கப்பட்ட அவருக்கு இந்த பதவி கிடைத்திருப்பதற்கு பலரும் தவெக அரசை பாராட்டியுள்ளனர். புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி உள்ளிட்ட குடும்பத்தினர் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேசமயம் பல நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர்.
அதில் ஒரு நேர்காணலில் பேசிய புஷ்பவனம் குப்புசாமி, “இசை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி என்பது என் கனவாக இருந்தது. நான் இரண்டு முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறேன். கலைமாமணி விருது பெற்றிருக்கிறேன். 3 ஆயிரம் மேடைகளில் ஏறியிருக்கிறேன். வெளிநாடுகளில் கச்சேரி செய்துள்ளேன். எனக்கு தமிழிசை, மக்களிசை, கர்நாடகா இசை, திரையிசை எல்லாரும் தெரியும். அதனால் நீங்கள் தகுதியான ஆள், விண்ணப்பித்து பாருங்கள் என சுற்றியிருந்தவர்கள் உசுப்பேற்றி விட்டார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட மக்களே பதவி வகித்து வருகிறார்கள். மற்றவர்கள் தகுதி இருந்தும் பதவி வகித்தால் என்ன தப்பு என்ற எண்ணம் இருந்தது” என தெரிவித்தார்.
புறக்கணித்த அதிமுக, திமுக
தொடர்ந்து பேசிய அனிதா குப்புசாமி, “நான் அதிமுகவில் இருந்த நிலையில் என் கணவருக்கு இருந்த தகுதியை சுட்டிக்காட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவியை தருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன். முதல் நாள் இரவு வரை நாளை அறிவிப்பு வரும் என சொல்லி விட்டு மறுநாள் அப்படி இல்லை என்றபோது எப்படி இருக்கும்?.. கிட்டதட்ட 8 ஆண்டுகள் அவர் முடங்கி போய் விட்டார். என் கணவர் முனைவர் பட்டம் வாங்க 10 ஆண்டுகள் போராடினார். அவர் எடுத்த தலைப்பு சர்ச்சையானதால் முனைவர் பட்டம் கொடுக்கவே மறுத்தார்கள்.
நான் சிறுவயதில் 22 கிலோமீட்டர் நடந்து போய் படித்தேன். அப்போதெல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள். நான் பெரிய இடத்துக்கு வந்தாலும் விவசாயத்தை கைவிடவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு ஒரு கச்சேரி கூட கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால் கூட ஏதோ சற்று ஆறுதலாக இருந்திருக்கும். கொடுக்கவில்லை என உண்மையை சொன்னாலும் கோபப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒரு அங்கீகாரம் கூட கொடுக்கப்படவில்லை. எங்களுக்கு எந்த காரணம் என்று கூட தெரியவில்லை.
அறநிலையத்துறையில் இருந்த அதிகாரிகள் தான் இதன் பின்னணியில் இருந்தது தெரிகிறது. நாங்கள் தலைமையை எப்போதும் குறை சொல்ல மாட்டோம். எங்களுக்கு கச்சேரி கொடுப்பதெல்லாம் கீழே இருக்கும் அதிகாரிகள் தான் என்றபோது அவர்கள் தான் இதற்கு பொறுப்பாவார்கள். தவெக அரசு என் கணவருக்கு இந்த பொறுப்பை கொடுத்ததும் விஜயை புகழ்ந்தோம். உடனே எதிர்த்தரப்பினர் எங்களை தற்குறிகள் என கூறுகிறார்கள்” என தெரிவித்துள்லார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















