சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் டேர்டெவில் திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் சம்பளம் இல்லாமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் டேர்டெவில் படத்தின் படபிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி ஷாலினி பெயரில் இப்படத்தை தயாரிக்கும் அஜித் குமார் சம்பளமே இல்லாமல் படப்பிடிப்பை துவங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து ஆதிக் மற்றும் அஜித் கூட்டணி டேர்டெவில் படத்தில் மீண்டும் இணைய இருக்கிறது. படத்தின் பட்ஜெட் மற்றும் அஜித் குமாரின் சம்பளம் காரணமாக இப்படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் படக்குழு பல்வேறு சவால்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான் இப்படத்தை அஜித் தனது மனைவி ஷாலினி பெயரில் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது
சம்பளமே இல்லாமல் நடிக்கும் அஜித்
டேர்டெவில் படத்தின் ப்ரோடக்ஷன் பணிகளுக்கான ரூ.100 கோடி நிதி வழங்க நிதியாளர்கள் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் ஜஸ்வந்த் பண்டாரி ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினரின் சம்பளம் மற்றும் படத்தின் தயாரிப்புச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.35 கோடி வழங்கப்பட உள்ளதாகவும், அதன்பிறகு படப்பிடிப்பு மற்றும் பிந்தைய தயாரிப்புப் பணிகளின் முன்னேற்றத்துக்கு ஏற்ப அடுத்தடுத்த கட்டங்களில் நிதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அஜித் குமாரின் சம்பளம் இந்த நிதியில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘டேர்டெவில்’ படத்துக்கு நிதியுதவி செய்வது தொடர்பாக முதலில் ஜஸ்வந்த் பண்டாரியை அணுகியபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான தயாரிப்புச் செலவு மற்றும் படத்தின் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் பொருளாதார ரீதியாக எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் படத்தின் முழுமையான வணிக சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த பிறகு, ஜஸ்வந்த் பண்டாரி இப்படத்துக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.100 கோடி நிதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















