Vidharth: இந்த நாளுக்காக தான் 13 வருஷம் காத்திருந்தேன்.. ‘இறுகப்பற்று’ சக்ஸஸ் மீட்டில் விதார்த் நெகிழ்ச்சி!
Vidharth: "இறுகப்பற்று திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு அதில் நானும் ஒரு அங்கம் என நினைக்கும் போது மனது நிறைவாக இருக்கிறது. இந்த வெற்றிக்காக தான் நான் 13 ஆண்டுகள் காத்திருந்தேன்".
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷரத்தா ஸ்ரீநாத், சான்யா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் "இறுகப்பற்று". அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக ஆடியன்ஸ் மத்தியிலும் நல்ல வரவேற்பையும் பத்திரிகை மற்றும் ஊடங்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்று இப்படம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
எமோஷனலான விதார்த் :
இந்நிலையில் இறுகப்பற்று படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நடிகர் விதார்த் கலந்து கொண்டு பேசினார். அவர் மேடையில் மிகவும் எமோஷனலாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விதார்த் தனது உரையை பத்திரிகையாளர்களும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் தொடங்கினார். "இந்த இடத்தை நான் அடைவதற்கு 13 ஆண்டுகள் எடுத்து கொண்டது. 'மைனா' படத்தின் வெற்றியை அடுத்து நடத்தப்பட்ட சக்ஸஸ் மீட்டில் தான் பத்திரிகையாளர்களை சந்தித்தோம்.
மக்களிடம் சேரவில்லை
ஒவ்வொரு நடிகனும் தான் நடிக்கும் படம் வெற்றி பெற வேண்டும் என தான் நினைப்பார்கள். அப்படி நான் ஒவ்வொரு படத்திலும் நடித்த பிறகு தயாரிப்பாளர்கள் வந்து படம் வெற்றிபெற்றதாக கூறுவார்களா என ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அமையவேயில்லை. நான் நடித்த படங்கள் நல்ல படங்களாவே இருந்தாலும் அவை பெரிய அளவில் மக்களிடம் போய் சேரவில்லை.
ஆனால் தற்போது இந்த இறுகப்பற்று திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு, அதில் நானும் ஒரு அங்கம் என நினைக்கும்போது மனது நிறைவாக இருக்கிறது. தயாரிப்பாளர்களே இப்படம் வெற்றி பெற்று விட்டது எனக் கூறுவதை கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்காக தான் நான் 13 ஆண்டுகள் காத்திருந்தேன். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்து எனது ஆசையை நிறைவேற்றிய படக்குழுவினருக்கு மிக்க நன்றி" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் விதார்த்.
எளிமையான அணுகுமுறை :
இன்றைய இக்கட்டான சூழலில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சர்வ சாதாரணமான பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும் என்பதை மிகவும் அழகாக தோழமையுடன் உரையாடியுள்ள திரைப்படம் தான் இறுகப்பற்று.
குடும்ப உறவுகள், திருமண உறவுகள் பற்றி பேசியுள்ள திரைப்படம் இறுகப்பற்று. திருமண வாழ்வில் உள்ள சிக்கல்களை மிகைப்படுத்தாமல் சமாதானமாக, அரவணைத்து எப்படி அணுகுவது என மிகவும் அழகாக இயக்குநர் யுவராஜ் தயாளன் காட்சிப்படுத்தியுள்ள நிலையில், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.