சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
புதிய தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார் நடிகர் சிபிராஜின் முயற்சிக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து.

நடிகர் சிபிராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி தயாரிப்பாளராக சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகர் சிபிராஜ்
நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் 1 படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். முன்னதாக சிபிராஜ் தனது பள்ளிப் படிப்பை சென்னையின் ஷெர்வுட் ஹால் மற்றும் டான் போஸ்கோ பள்ளிகளில் முடித்தார். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் (B.Com) பட்டம் பெற்றார். நடிப்புத் திறமையை வளர்த்துக் கொள்ள அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் (New York Film Academy) பயிற்சியும் பெற்றார். தொடர்ந்து, ஜோர், கோவை, பிரதர்ஸ், சக்திவேல் வெற்றிவேல் படங்களில் தனது தந்தையுடன் இணைந்து நடித்து பிரபலமான அவருக்கு, லீ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அதனை சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறிய சிபிராஜுக்கு அவர் நடித்த அடுத்த சில படங்கள் தோல்வியில் முடிந்தன. பின்னர், 2014 ஆண்டு வெளிவந்த நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் அவருக்கு ஒரு சிறந்த கம்-பேக்-ஆக அமைந்தது. அதன்பின், ஜேக்சன் துரை, சத்யா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.
தயாரிப்பாளர் அவதாரம்
தொடர்ந்து, வித்தியசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்குகிறார். அதற்காக அண்டர்டாக்ஸ் பிலிம்ஸ் (Underdogs films) என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.
முதல் படம்
’ஜீப்ரா’ படத்தை இயக்கிய ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள புதிய படத்தை சிபிராஜ் தயாரிக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் படமே அவரது முதல் தயாரிப்பாக அமைந்துள்ளது. இந்த படம் குறித்த பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய முயற்சி
தயாரிப்பாளராக களமிறங்குவது குறித்து சிபிராஜ் பேசுகையில், “சினிமாவை நம்பி புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன். எனது புதுமுயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” என்று பேசினார்.
குவியும் வாழ்த்து
சிபிராஜின் இந்த புதிய முயற்சிக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















