Marimuthu Funeral: நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நாளை அடக்கம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்
திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஜி. மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நாளை சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஜி. மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது.
யார் இந்த மாரிமுத்து?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே சிங்கராஜபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பசுமலைத்தேரி கிராமத்தை சேர்ந்த குருசாமி , மாரியம்மாள் தம்பதிக்கு ஏழு பிள்ளைகள். இதில் ஜி.மாரிமுத்து 5 வயது மகன். அவருக்கு வயது 63. சகோதரிகள் நான்கு பேர், சகோதரர்கள் மூன்று பேர். மாரிமுத்து சொந்த ஊரில் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று வந்தவர்.
MS Dhoni : ட்ரம்ப் உடன் கோல்ஃப் விளையாடிய தோனி..வைரலாகும் புகைப்படம்..!
பன்னிரண்டாம் வகுப்பு தனியார் பள்ளியில் படித்து வந்தவர், மேல் படிப்பு சென்னையில் முடித்தார். சினிமா ஆசையால் சிறுவயதிலேயே சென்னை சென்ற அவர், இயக்குனர்கள் ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த் உள்ளிட்டோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 2008ம் ஆண்டு ’கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு ‘புலிவால்’ என்ற படத்தை இயக்கினார். பின்னர், குணச்சித்திர வேடங்களிலும், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
மனைவி, ஒரு மகள் ஒரு மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வந்தார். சொந்த ஊரில் சகோதரர் லட்சுமணன் உள்ளிட்ட உறவினர்கள் மட்டும் உள்ளனர். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான "ஜெயிலர் " திரைப்படத்தில் வில்லனுக்கு வலது கையாக, உதவியாளராக படம் முழுக்க வந்து நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இந்த நிலையில், இன்று காலை தான் நடித்து வரும் ’எதிர்நீச்சல்’ தொடருக்கான டப்பிங் பணியில் இருந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவரே தனது காரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர், அவர் இறந்துவிட்டதாக அவரின் மகள் மூலம் செய்தி வெளியானது. இது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு அவரின் சொந்த ஊரில் நாளை நடக்கிறது,. மதியம் 12 மணிக்கு அவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரின் உறவினர்கள் செய்து வருகின்றனர். அவரின் இறப்பு செய்தியால் அவ்வூர் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் போட்டியாளராக மாரிமுத்து கலந்து கொண்டார். அவருடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ். சிவாஜியும் கலந்து கொண்டார். மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த இரு திறமையான நடிகர்களுமே இன்று உயிருடன் இல்லை. கடந்தவாரம் உடல் நல குறைவால் ஆர்.எஸ். சிவாஜி காலமாக இன்று நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிர் இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.