18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
படிக்காதவன் படத்தில் இருந்து விலகிய நடிகர் வடிவேலு 18 ஆண்டுகள் கழித்து தனுஷின் D56 படத்தில் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்

நடிகர் தனுஷும் வடிவேலுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனுஷின் 56-வது படத்தில் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்த நிலையில், தனுஷும் வடிவேலுவும் இதற்கு முன்பு ஏன் இணைந்து நடிக்கவில்லை என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கான பின்னணி குறித்து வடிவேலுவே தற்போது பேசியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசிய அவர், தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைக்கு மூன்றாவது நபர் ஒருவரால் உருவான தவறான புரிதல்களே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
படிக்காதவன் படத்தில் முதலில் வடிவேலு
தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் ‘அசால்ட் ஆறுமுகம்’ கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என்றே சொல்லலாம்.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் வடிவேலு. படப்பிடிப்பு தொடங்கிய பிறகு ஏற்பட்ட சில சம்பவங்களைத் தொடர்ந்து அவர் படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னரே அந்த கதாபாத்திரத்தில் விவேக் நடித்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
‘படிக்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. ஒரு காட்சியில் வடிவேலுவை மீசை ராஜேந்திரன் அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. முதலில் இதற்கு வடிவேலு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின்னர் காட்சியில் நடிக்க சம்மதித்ததாகவும் மீசை ராஜேந்திரன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு தனுஷும் வடிவேலுவும் நேருக்கு நேர் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சிக்கு பல டேக்குகள் சென்ற நிலையில், லைட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இயக்குநர் சுராஜ் மைக்கில் வடிவேலுவை குறிப்பிட்டு நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்தார். இதனால் வடிவேலு சுராஜை முறைத்துள்ளார்.
அடுத்தடுத்த டேக்குகளிலும் காட்சி எதிர்பார்த்தபடி வராத நிலையில், இயக்குநர் கூறியபடி நடிக்குமாறு தனுஷ் வடிவேலுவிடம் தெரிவித்துள்ளார். இதற்கும் வடிவேலு தனுஷை முறைத்துள்ளார்.
ஏன் விவேக் வந்தார்?
தொடர்ந்து சுமன் உடன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட இருந்த நிலையில், அந்த காட்சியில் வடிவேலு சுமனின் காலை பிடிப்பது தொடர்பாகவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி வடிவேலு படப்பிடிப்பிலிருந்து வெளியேறியுள்ளார்.
அதன்பிறகு வடிவேலு மீண்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதையடுத்து அவருக்கு பதிலாக விவேக் அந்த கதாபாத்திரத்தில் இணைந்தார்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன்
‘படிக்காதவன்’ படத்துக்குப் பிறகு தனுஷும் வடிவேலுவும் நீண்ட காலமாக ஒரே படத்தில் நடிக்கவில்லை. இந்த நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
தற்போது இந்த இணைவு குறித்து பேசியுள்ள வடிவேலு, தங்களுக்குள் நீண்ட கால இடைவெளி ஏற்பட்டதற்கு மூன்றாவது நபரால் உருவான தவறான புரிதல்களே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
‘படிக்காதவன்’ படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் பல ஆண்டுகளுக்குப் பிறகு அளித்த பேட்டியில் இந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















