ரூ.4.75 லட்சத்தில் உருவான படம்..‘16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் ரூ.4.75 லட்சத்தில் உருவான 16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியின் சம்பளம் உள்ளிட்ட சுவாரஸ்ய தகவல்கள்.

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் 16 வயதினிலே, இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்பயணத்தில் மட்டுமல்லாமல், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோரின் திரைப்பயணத்திலும் முக்கிய திரைப்படமாக அமைந்தது. 1977-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலமாக பாரதிராஜா இயக்குநராக அறிமுகமானார்.
ரூ.4.75 லட்சத்தில் உருவான படம்

இன்றைய திரைப்படங்கள் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் நிலையில், 16 வயதினிலே சுமார் ரூ.4.75 லட்சம் செலவில் உருவானதாக குறிப்பிடப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டிலும் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான காட்சியமைப்பு மூலம் இப்படம் தனித்துவமான அடையாளத்தை பெற்றது.
கமல், ரஜினியின் சம்பளம்

படத்தில் சப்பாணியாக நடித்த கமல்ஹாசனுக்கு ரூ.27,000 சம்பளம் வழங்கப்பட்டதாக பாரதிராஜா பின்னர் தெரிவித்துள்ளார். பரட்டை கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ரூ.2,500 வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது இருவரும் இன்றைய அளவிலான முன்னணி நட்சத்திரங்களாக உயரவில்லை.
ஸ்டுடியோவை விட்டு கிராமத்துக்குள் சென்ற பாரதிராஜா

16 வயதினிலே திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று அதன் படப்பிடிப்பு. அந்த காலகட்டத்தில் பெரும்பாலான தமிழ் படங்கள் ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட்ட நிலையில், இப்படம் பெரும்பாலும் வெளிப்புற இடங்களிலேயே படமாக்கப்பட்டது. மைசூர், கோலேகல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.
மெதுவாக ஓடிய ஸ்ரீதேவி

படத்தின் குறைந்த பட்ஜெட் காரணமாக ஸ்லோ மோஷன் காட்சிகளை படமாக்குவதற்கான கேமரா வசதி இல்லாததால், ‘செந்தூரப்பூவே’ பாடலில் ஸ்ரீதேவி சில காட்சிகளில் மெதுவாக ஓட வேண்டியிருந்தது
முதலில் ‘மயில்’.. பின்னர் ‘16 வயதினிலே’
படத்திற்கு முதலில் ‘மயில்’ என்றே பெயரிடப்பட்டிருந்தது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிதியுதவி கிடைக்காத நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு இப்படத்தை தயாரித்தார். பின்னர் படத்தின் பெயர் 16 வயதினிலே என மாற்றப்பட்டது.
விநியோகஸ்தர்கள் தயங்கிய படம்
படம் முடிந்த பிறகும் விநியோகஸ்தர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளரே படத்தை வெளியிட்டார். பின்னர் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இளையராஜாவின் இசை, பாரதிராஜாவின் கிராமிய காட்சியமைப்பு, கமல்ஹாசனின் சப்பாணி, ரஜினிகாந்தின் பரட்டை, ஸ்ரீதேவியின் மயில் என பல அம்சங்கள் இணைந்த 16 வயதினிலே, தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்க்கையை அணுகிய விதத்தில் புதிய பாதையை உருவாக்கிய படமாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















