Nagercoil Constituency Winner: தமிழகத்தில் மலர்ந்த தாமரையில் ஓர் இதழ் காந்தி; யார் இந்த எம்.ஆர்.காந்தி.?
பாஜவிற்கு முதல் எம்எல்ஏவை கொடுத்த இந்த குமரி மாவட்டம், 25 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஆர்.காந்திக்கு எம்எல்ஏ பதவியை கொடுத்து அவரை கோட்டைக்கு அனுப்பி வைக்க உள்ளது.
6 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்று, 75 வயதில் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் தமிழகத்தில் தாமரையை மலர்வைத்தவர் என்ற மகிழ்ச்சியோடு பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 159 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. இதில், திமுக 125 இடங்களை கைப்பற்றியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை முதல்வராக பெறுப்பேற்க உள்ளார்.
இந்தத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும், அதேவேளையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 4 தொகுகளில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதில், கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே அரசியலுக்கு புதுமுகமான கமல்ஹாசனை பாஜக வீழ்த்தியது. மற்ற மூன்று இடங்களில் பாஜக வீழ்த்தியிருப்பது பெரும்பான்மையுடன் வெற்றி திமுக என்பது அனைவரையும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
இதில், நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மூத்த வேட்பாளர் எம்.ஆர்.காந்தியின் வெற்றி குறித்து பெரிதும் பேசப்படுகிறது. 74058 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த எம்.ஆர்.காந்தி, திமுகவின் சுரேஷ் ராஜனை 11, 669 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுரேஷ் ராஜன் 5887 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப்பிடித்தார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான சுரேஷ் ராஜன், திமுக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன இவர், இந்த முறையும் ஜெயித்து விட்டு, அமைச்சராகிவிடலாம் என்று நினைத்திருந்த நிலையில், அவரின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளார் பாஜகவின் எம்.ஆர்.காந்தி.
யார் இந்த எம்.ஆர்.காந்தி ..?
பாஜகவின் தாய் இயக்கமான ஜனசங்கத்தின் மாவட்ட தலைவராக 1967 ஆம் ஆண்டு பொறுப்பு வகித்த இவர், 1975ஆம் ஆண்டு மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தார். ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மாறியபோது 1980 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக்குழுவில் இடம்பெற்றார். இதன்பின்னர் 2001ஆம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆனார்.
தற்போது, நாகர்கோவில் எம்எல்ஏவாக ஆக உள்ளார். அதுவும் தனது 75 வயதில் எம்எல்ஏவாக ஆகியுள்ளார். 6 முறை தோல்விஅடைந்து, 7 ஆவது முறையில் வெற்றியை ருசித்துள்ளார். இவர் கடந்த 1980, 89 மற்றும் 2016 ஆம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியிலும், 1984, 2006ஆம் ஆண்டு குளச்சல் தொகுதியிலும். 2011 ஆம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆறு முறை தோல்வியை சந்தித்த இவர், தனது விடாமுயற்சியை மட்டும் விடவில்லை, அதன் பலனாக நாகர்கோவில் தொகுதி, தனது 7ஆவது முயற்சியின்போது அவருக்கு வெற்றியை பரிசாக கொடுத்துள்ளது. இதன்மூலம், தனது 75 வயதில் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார் இந்த காந்தி. அத்துடன், இளம் அரசியல்வாதிகளுக்கு விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காகவும், பாஜகவின் கட்சி பணிக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமல் எளிமையாக வாழ்ந்து வரும் எம்.ஆர்.காந்திக்கு சொந்தமாக வீடு கூட இல்லை. காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல், கசங்கிய வெள்ள வேட்டி, ஜிப்பாவுடன் மாவட்டம் முழுவதும் சுற்றி அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் குமரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜவிற்கு முதல் எம்எல்ஏவை கொடுத்த இந்த குமரி மாவட்டம், 25 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஆர்.காந்திக்கு எம்எல்ஏ பதவியை கொடுத்து அவரை கோட்டை அனுப்பி வைக்க உள்ளது.