TN Urban Local Body Election 2022 Voting: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022: தொடங்குகிறது வாக்குப்பதிவு !
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நாளை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருந்தனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 1374
போட்டியின்றி தேர்வானவர்கள்: 4
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 1370
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 11,196
நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 3843
போட்டியின்றி தேர்வானவர்கள்: 18
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 3825
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 17,922
பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 7609
போட்டியின்றி தேர்வானவர்கள்:196
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 28,660
மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர்.
இன்று தேர்தல் நடைபெறாத இடங்கள்:
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8ஆவது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் பேரூராட்சியின் 12 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு அம்மாப்பேட்டை பேரூராட்சியில் வேட்பாளர் ஐயப்பன் மறைவால் தேர்தல் அங்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9ஆவது வார்டிலும் வேட்பாளர் மரணத்தால் இன்று தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்