"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
“முடிந்தால் தமிழ்நாட்டுக்கு தட்சிண பிரதேசம் என்று பெயர் வைத்து பாருங்கள்; சும்மா இருக்க மாட்டோம்” என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்க முடியாது என்றும் முடிந்தால் தமிழ்நாட்டுக்கு தட்சிண பிரதேசம் என்று வைத்து பாருங்கள் என்றும் திருவள்ளூர் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்த ஸ்டாலின் இருக்கும் வரை தொடமுடியாது
திருவள்ளூரில் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நமது தாய்க்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டினார். தமிழ்நாட்டை தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆர்.என்.ரவி கூறினார். தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று ஆர்.என்.ரவி கூறியது தனி நபரின் குரல் அல்ல, அது பாஜகவின் குரலாகும். நாங்கள் நினைத்தால் தமிழ்நாட்டையே இரண்டாக உடைப்போம் என்று திமிராக பேசினார்கள். இந்த ஸ்டாலின், திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜகவால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. முடிந்தால் தமிழ்நாட்டுக்கு தட்சிண பிரதேசம் என்று பெயர் வைத்து பாருங்கள்; சும்மா இருக்க மாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அடிகை சாமி மாதிரி சும்மா இருக்க மாட்டோம்
தொடர்ந்து பேசிய முதல்வர், “எல்லோரும் அடிகை சாமி மாதிரி சும்மா இருக்க மாட்டோம்; நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். மத்திய பாஜக அமைச்சர்கள் பியூஷ் கோயல் உள்ளிட்டோரின் பேச்சை பழனிசாமி கண்டித்தாரா?. மும்மொழிக் கொள்கை தொடர்பாக பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்க பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா? . இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாட்டை தண்டிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும் என்றும் வடக்கில் இருந்து வரும் NDA என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது என்றும் கூறினார்.
சிறுமி தான்யாவை நினைவுகூர்ந்த முதல்வர்
திருவள்ளூர் என்றதும் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாதான் தன் நினைவுக்கு வந்ததாகவும் தான்யாவை தன் குழந்தை மாதிரி கவனித்து மருத்துவ சிகிச்சையை வழங்கியதாகவும் சிறுமியின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்ததாகவும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















