TN Election 2026: ”லிட்டருக்கு ரூ.25-28 விலை உயருது.. ” மாணிக்கம் தாக்கூர் சொன்னது பொய் என அரசு விளக்கம்
Tamilnadu Assembly Election 2026: ஐந்து மாநில தேர்தல் முடிந்ததுமே எரிபொருட்களின் விலை உயரும் என்ற செய்தியை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மறுத்துள்ளது.

Tamilnadu Assembly Election 2026: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிந்ததுமே, எரிபொருட்களின் விலை கடுமையாக உயரும் தனியார் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.
பிரதமர் மோடியின் பரிசு காத்திருக்கு..
காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், “நீங்க இன்று வாக்களித்த பின் மோடியின் பரிசு காத்து இருக்கு…” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, ”கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை 25 முதல் 28 ரூபாய் வரை உயர்த்தப்படும்”என ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்திய்யையும் பகிர்ந்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள், வாக்காளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை
தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்ததும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதால் லிட்டருக்கு 25 முதல் 28 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்நாட்டுத் தரகு நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலையற்ற சந்தை.. தடுமாறும் நிறுவனங்கள்
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்மஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களுக்கும் நேரடி சந்தைகளுக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்து வருவதாகவும், தொடர்ச்சியான விநியோக நெருக்கடியால் குறுகிய கால நிவாரணம் குறைவாக இருப்பதையும் குறிக்கிறதாம்.
நீங்க இன்று வாக்களித்த பின் மோடியின் பரிசு காத்து இருக்கு…
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) April 23, 2026
👇#தமிழ்நாடுதேர்தல் https://t.co/j2nuRyuOGK
தாறுமாறாக உயர்ந்த செலவு
இந்தியாவின் சில்லறை விற்பனைக்கான எரிபொருள் விலை நெருக்கடியில் உள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இந்தியாவின் இறக்குமதிச் செலவை கணிசமாக அதிகரித்துள்ளது, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யும் அளவு 13-15 சதவிகிதம் சரிவை கண்டாலும், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு ஒரு நாளைக்கு சுமார் $190-210 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.
இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இதுவரை மாற்றமின்றி உள்ளன. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கலால் வரியை வெகுவாக குறைத்துள்ளது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெயின் விலை, சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான செலவை அதிகரித்துள்ளது. , இதன் விளைவாக மாதத்திற்கு சுமார் ₹270 பில்லியன் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லிட்டருக்கு எவ்வளவு விலை உயரும்?
தொடர்ந்து விலை உயர்வதோடு, நீண்ட நாட்களுக்கு கலால் வரியை ரத்து செய்வது அரசாங்கத்திற்கும் பெரிய வருமான இழப்பை ஏற்படுத்தும். எனவே, தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாத்தியம் என்றே கூறப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 29 அன்று மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல்கள் முடிந்த பின்னரே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் $120 ஆக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒரு லிட்டருக்கு ₹25–28 வரை உயரக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், பணவீக்க பிரச்னைகளையும், சுத்திகரிப்பு நிறுவனங்களின் இழப்புகளை கட்டுப்படுத்தும் தேவையையும் சமநிலைப்படுத்தும் வகையில், விலை உயர்வுகள் படிப்படியாகவே இருக்கலாம்” எனவும் அந்த ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம்
எரிபொருட்களின் விலை உயர்வு தொடர்பான செய்தியை மறுத்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இருப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய எந்தவொரு திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை. இதுபோன்ற செய்திகள் குடிமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் நோக்கத்துடன், தீய நோக்கத்துடனும் தவறான வழிகாட்டுதலுடனும் உருவாக்கப்படுகின்றன. சர்வதேச விலைகளில் ஏற்படும் கடுமையான உயர்வுகளிலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக, இந்திய அரசும் எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்களும் இடைவிடாத நடவடிக்கைகளை எடுத்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்




















