Lok Sabha Constituency: சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன்! செய்ததும், செய்ய மறந்ததும் - ஓர் அலசல்
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தேர்தல் நேரத்தில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் பற்றியும், அவரது செயல்பாடுகள் பற்றியும் கீழே விரிவாக காணலாம்.
இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவாகியது சேலம் மாவட்டம். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது. தற்போது அவை அனைத்தும் பிரிக்கப்பட்டு பதினோரு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி என ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை:
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 8,23,336, பெண் வாக்காளர்கள் 8,25,354, மூன்றாம் பாலினத்தவர் 221 வாக்காளர்கள் என முத்தம் 16,48,911 வாக்காளர்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்:
- 1952 - எஸ்.வீ. ராமசாமி (காங்கிரஸ்)
- 1957 - எஸ்.வீ. ராமசாமி (காங்கிரஸ்)
- 1962 - எஸ்.வீ. ராமசாமி (காங்கிரஸ்)
- 1967 - ராஜாராம் (திமுக)
- 1971 - கிருஷ்ணன் (திமுக)
- 1977 - கண்ணன் (அதிமுக)
- 1980 - பழனியப்பன் (திமுக)
- 1984 - ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)
- 1989 - ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)
- 1991 - ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)
- 1996 - தேவதாஸ் (தமிழ் மாநில காங்கிரஸ்)
- 1998 - வாழப்பாடி ராமமூர்த்தி (சுயேச்சை)
- 1999 - செல்வகணபதி (அதிமுக)
- 2004 - கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)
- 2009 - செம்மலை (அதிமுக)
- 2014 - பன்னீர்செல்வம் (அதிமுக)
- 2019 - எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக)
இதுவரை நடைபெற்ற 17 சேலம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 7 முறையும், திமுக மற்றும் அதிமுக தலா நான்கு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
2019 நாடாளுமன்ற தேர்தல்:
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற 2019 தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 6,06,302 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4,59,376 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரவு மணிகண்டன் 58,662 போக்குகளும், அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 52,332 வாக்குகளும் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை விட 1,46,926 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் முக்கிய வாக்குறுதிகள்:
விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும், பூக்களைப் பதப்படுத்தி வைக்க கிடங்கு அமைக்கப்படும், வாசனை திரவிய தொழிற்சாலை உருவாக்கப்படும், ராணுவ தடவாள தொழிற்சாலை அமைக்கப்படும், ஜருகுமலை குக்கிராமத்தில் செல்போன் டவர் வசதி கொண்டுவரப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதிகளாக அளித்தார்.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
சேலம் மெட்ரோ ரயில் திட்டம், பூக்களைப் பதப்படுத்தி வைக்க கிடங்கு, வாசனை திரவிய தொழிற்சாலை, ராணுவ தடவாள தொழிற்சாலை அமைக்கப்படுவது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
நாடாளுமன்றத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர்.பார்த்திபனின் பதிவு விவரங்கள்:
87 சதவீதம் வருகை பதிவு.
39 விவாதங்களில் பங்கேற்பு.
263 கேள்விகள் எழுப்பியுள்ளார்.
0 தனிநபர் மசோதா.
நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்பு:
சேலத்திற்கு ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, ரயில் சேவை விரிவாக்கம், சேலம் இரும்பாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் நலன், காவிரி நீர் வழித்தடங்களில் சுத்தப்படுத்த நிதி கோருதல் உள்ளிட்ட தொடர்பான விவாதங்களில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பங்கேற்றுள்ளார்.
சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.ஆர்.பார்த்திபன் என்னென்ன செய்தார்?
- சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கிராமங்களுக்கு சென்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் மூலம் 1.07 லட்சம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். குறிப்பாக, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, சாலை, குடிநீர், சாக்கடை, மருத்துவம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் வழங்கி கண்காணித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
- சேலம் நாடாளுமன்ற தொகுதியில் புற்றுநோய் சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவ உதவிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 105 பயனாளிகளுக்கு, ரூபாய் 3.60 கோடி மதிப்பிலான மருத்துவ உதவி பெற்று கொடுத்துள்ளார்.
- பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்த கேள்வி எழுப்பி நிலையில், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று பாராளுமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. இதனால் தமிழக முதல்வர் உடனடியாக ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா தடை சட்டம் கொண்டு வந்தார்.
மக்கள் எதிர்பார்ப்பு:
- சேலம் மாநகர பகுதியில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினை விரைவில் முடிக்க வேண்டும்.
- சேலத்தில் இருந்து சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு பகலில் ரயில் சேவை வழங்க வேண்டும்.
- சேலம் முதல் விருதாச்சலம் வரை செல்லும் பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.
- சேலம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும்.
- திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகளை கலக்காமல் பாதுகாத்து, சுத்தம் செய்ய வேண்டும்.
- சேலம் விமான நிலையத்திலிருந்து சீரடி மற்றும் திருப்பதிக்கு விமான சேவை இயக்கப்பட வேண்டும்.
- சேலம் விமான நிலையத்தை உருவாக்கும் செய்து தீர்மானம் இரவில் தரையிறங்கும் வசதியை செய்தும், சரக்கு விமானங்களை இயக்க வேண்டும்.