Local Body Election:சேலம் மாநகராட்சியில் 14வது வார்டு அதிமுக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு.. காரணம் என்ன?
20 மற்றும் 29 வது வார்டு அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்றைய தினம் தமிழகம் முழுவதும் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 14 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடேசன் மனு நிராகரிக்க கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நடேசன் மனைவி பேரில் சொத்து மற்றும் குடிநீர் வரி கடந்த 9 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ள ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இதனையடுத்து அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நடேசன் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர் வரி செலுத்தாத காரணத்தினால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிமுக வேட்பாளர் நடேசனுக்கு பதிலாக 14 வது வார்டில் பன்னீர்செல்வம் என்பவர் அதிமுக மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நடேசன் கூறும்போது, அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது திமுகவினர் குறுக்கு வழியில் வெற்றி பெற அதிகாரிகளை பயன்படுத்தி தேர்தல் விதிகளுக்கு அப்பாற்பட்டு மனுவை நிராகரிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். திமுக வழங்கிய மனு மீதான விசாரணை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடேசனின் மனைவி பெயரில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 850 ரூபாய் சொத்து வரி மற்றும் 21 ஆயிரத்து 444 ரூபாய் குடிநீர் வரி நிலுவையில் இருந்த நிலையில் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டபோது வரியினை செலுத்தினார். இறுதியாக 2 ஆயிரத்து 326 ரூபாய் வரி நிலுவையில் இருந்ததால் நடேசனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக உதவி தேர்தல் நடத்தும் ஆணையாளர் தெரிவித்தார்.
இதேபோன்ற சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுமதி மற்றும் 29 வது வார்டு அதிமுக வேட்பாளர் சத்தியா போன்றவர்களின் வேட்பு மனு நிலுவையில் வைக்கப்பட்டு பின்னர் இறுதியில் ஏற்கப்பட்டது. சேலம் மாநகராட்சி 5 வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் கல்லூரி மாணவி காவியா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 21 வயது பூர்தியாகத்தால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை 18 வயது பூர்த்தியடைந்த இருந்தால் போட்டியிடலாம் என்று சொன்னதின் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்ததாக காவியா தெரிவித்தார்.