Rajasthan Election 2023: என்ன ஆச்சு ராஜஸ்தானுக்கு? 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் இதுதான்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுவதால் இந்த தேர்தலில் கட்சிகள் வாக்குகளை அள்ள பல்வேறு தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டனர்.
ராஜஸ்தான் மாநித்தின் சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று அதாவது நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் தொடங்கி பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த பொதுத் தேர்தலில் காலை முதல் மிகவும் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். இங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுவதால் இந்த தேர்தலில் கட்சிகள் வாக்குகளை அள்ள பல்வேறு தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டனர்.
55.63% voter turnout recorded in Rajasthan till 3pm, as per Election Commission of India. pic.twitter.com/WHql8aFbRM
— ANI (@ANI) November 25, 2023
இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய வாக்குப் பதிவு தற்போது சற்று மந்தமாகியுள்ளது. மதியம் 3 மணி நிலவரத்தின்படி 55.63% வாக்கு பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 3 மணி நிலவரத்தின்போதே மொத்த வாக்குப்பதிவானது 55 சதவீதம் மட்டும் இருப்பதால் மக்களுக்கு வாக்கு செலுத்த ஆர்வம் இல்லையா அல்லது விழிப்புணர்வு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, 5 மாநில தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில், மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஒரேகட்டமாக வாக்குப்பதிவு:
மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. வரும் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், எம்எல்ஏவுமான குர்மீத் சிங் கூனார் மரணமடைந்ததால், இந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா அறிவித்தார்.
வாக்காளர் விவரங்கள்:
199 தொகுதிகளில் களமிறங்கியுள்ள ஆயிரத்து 862 வேட்பாளர்களின் தலை எழுத்தை நிர்ணயிக்க, 5 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரத்து 105 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 18-30 வயதுக்குட்பட்ட 1,70,99,334 வாக்காளர்களும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 22,61,008 புதிய வாக்காளர்களும் அடங்குவர்.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்:
மாநிலத்தில் மொத்தம் 36,101 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், நகர்ப்புறங்களில் 10,501 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும், 65,277 வாக்குப்பதிவு குழுக்கள், 62,372 கட்டுப்பாட்டு குழுக்கள், இருப்புக்கள் உட்பட 67,580 விவிபிஏடி இயந்திரங்கள் வாக்குப்பதிவு பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக 1,02,290 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாறுமா வரலாறு?
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தேர்வுத்தாள் ஊழல், விவசாயிகள் தற்கொலை போன்றவை ஆளும் காங்கிரஸுக்கு எதிராக பாஜகவால் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுக்ள் ஆகும். அதேநேரம், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆட்சி மாறும் என்ற, கடந்த 30 ஆண்டுகால வரலாறு இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என, முதலமைச்சர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.