புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீட்டு அரசாணை ரத்து-விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு
’’கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடுகளுடன் வார்டுகள் சீரமைக்கப்ட்டு ஒரு வாரத்தில் புதிய தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியாகும்’’
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஓதுக்கீடு தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலை போன்று பழைய நடைமுறைப்படியே உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. அக்டோபர் 12ஆம் தேதிக்குள் புதிய தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் ஆறிவிப்பை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு, பணிகளை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்த தேர்தலில் பட்டியல் இனத்தவர், பிற்பட்டோருக்கான இட ஓதுக்கீடில் குளறுபடி உள்ளதால், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை தொடர்ந்து, தேர்தல் ஏற்பாட்டில் குளறுபடி இருப்பதை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம் புதுவையில் தற்போது அறிவித்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற உத்தரவிட்டதுடன்; தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து விட்டு, 5 நாட்களில் இடஓதுக்கீடு சட்ட விதிகளை சரியாக பின்பற்றி அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் விரைவில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஓதுக்கீடு தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை நேற்று ரத்தானது.
இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, கடந்த 2019ஆம் ஆண்டு அரசாணை ரத்தானது. பிற்பட்டோர், பழங்குடியினர் போன்ற சுழற்சி முறை இட ஓதுக்கீடுகளின்றி, கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் போன்று பழைய நடைமுறைகள் படி தேர்தல் நடக்கும். கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பொது, பட்டியல் இனத்தவர், பெண்கள் இடஒதுக்கீடுகளுடன் வார்டுகள் சீரமைக்கப்படும். அதன் பிறகே தேர்தல் துறை சார்பில், தற்போது அறிவித்த தேர்தலை ரத்து செய்து, ஓரு வார காலத்தில் புதிய தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர் 12ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் புதிய அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது என்றனர்.
புதுச்சேரியில் 38 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றத்தில் ஒரு நீண்ட முயற்சி எடுத்த சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் இது பற்றி கூறுகையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் 2019 ஆம் ஆண்டின் அறிவிப்பை திரும்ப பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவு, தேர்தலை சுமூகமாக நடத்துவது போல் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். எதிர் கட்சியான திமுகவும் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.