நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பா? காங்கிரஸ் தலைவர் கார்கே பரபரப்பு பதில்!
Lok Sabha Election Results 2024: கூட்டணியில் இணைய நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
294 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் 239 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு? மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால், இன்னும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, நொடிக்கு நொடி எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், "கூட்டணி கட்சி தலைவர்களுடனும் புதிதாக வர உள்ள கூட்டணி கட்சி தலைவர்களுடனும் இன்னும் பேசவில்லை. அவர்களுடன் பேசி பெரும்பான்மை பெறுவது எப்படி என்பது குறித்து யோசிப்போம். எல்லாவற்றையும் இங்கு சொல்லிவிட்டால் மோடிக்கு அது தெரிந்துவிடும்" என்றார்.
காங்கிரஸ் தலைவர் அளித்த பதில்: இரண்டு மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் எந்த எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "நான் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளேன். வாக்காளர்களுக்கு நன்றி. நான் எந்த இடத்தை தக்கவைக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க வேண்டும். நான் இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "நமது இந்திய கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் நாளை ஒரு சந்திப்பை நடத்த உள்ளோம். நாங்கள் எங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறோம், அவர்களுடன் பேசாமல் பத்திரிகைகளுக்கு அறிவிக்க மாட்டோம்.
நாங்கள் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மட்டுமல்ல, அமைப்புகள், நாட்டின் நிர்வாக அமைப்பு, உளவுத்துறையான சிபிஐ & இடி, நீதித்துறை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினோம், ஏனெனில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியால் கைப்பற்றப்பட்டுள்ளன.
உ.பி. மக்கள், நாட்டின் அரசியலையும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் புரிந்து கொண்டு, அரசியலமைப்பை பாதுகாத்தனர். காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கூட்டணிக்கு ஆதரவு அளித்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.