Lok Sabha Election Results 2024: மக்களவை தேர்தல் - 64.2 கோடி பேர் வாக்களிப்பு, இதுவரை இல்லாத புதிய உச்சம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 31.2 கோடி பெண்கள், வாக்களித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், நாளை எண்னப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
64.2 கோடி பேர் வாக்குப்பதிவு:
அப்போது பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “. பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்று அதனை வெற்றிகரமானதாக மாற்றியுள்ளனர். தேர்தல் தொடர்பாக இதுவரை இல்லாத அளவில் 100 செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளோம் 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் - உலகிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும். பெண்கள் மட்டுமே 31.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டோரும், மாற்றுத்திறனாளிகளும் அதிக எண்ணிகையில் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கான எழுந்து நின்று கைதட்டுகிறோம்.
#WATCH | Delhi | Election Commission of India gives a standing ovation to all voters who took part in Lok Sabha elections 2024 pic.twitter.com/iwIfNd58LV
— ANI (@ANI) June 3, 2024
தேர்தல் பணியில் ஒன்றரை கோடி பேர்:
‘ஜி7 ஒட்டுமொத்த வாக்களர்களின் எண்ணிக்கையை விட, இந்தியாவில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கு அதிகம். 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட, இரண்டரை மடங்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றரை கோடி பேர் பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு & காஷ்மீர் வாக்குப்பதிவு:
தேர்தல் ஆணையர்களை காணவில்லை என சமூக வலைதளங்களில் மீம்ஸை பார்த்தோம். ஆனால் நாங்கள் காணாமல் போகவில்லை. இங்கு தான் இருக்கிறோம். ஜம்மு & காஷ்மீரில் கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத வகையில் அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் எந்த பெரிய கலவரமும் இன்றி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2019ல் மொத்தமாக 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதில் 25 மறுவாக்குப்பதிவுகள் 2 மாநிலங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது.
பாரபட்சம் இன்றி நடவடிக்கை:
நக்சல் பாதிப்புகள் இருக்கும் பகுதிகளில் கூட அதிக வன்முறை இன்றி தேர்தல் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர், கட்சி தலைவர் என பாரபட்சமின்றி ஹெலிகாப்டர்கள் சோதனையிடப்பட்டன. நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதற்காக பல்வேறு தலைவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. விதிமீறல் தொடர்பாக சுமார் நான்கரை லட்சம் புகார்கள் வந்த நிலையில், அதில் 99.9% சதவிகித புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. உயர்மட்ட தலைவர்களுக்கு எதிராகவே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கமளித்தார்.
10 அம்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்:
தொடர்ந்து பேசுகையில், “வாக்கு எண்ணும் பணிக்காக 10 அம்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- வாக்குப்பதிவு தொடங்கிய நேரம், முடிந்த நேரத்தை கட்டுப்பாட்டு இயந்திரத்தில் சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.
- ஒவ்வொரு வாக்கு இயந்திரத்தின், தனி அடையாள எண், சீல்களை சரிபார்க்கவும், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையையும் 17சி படிவத்தில் உள்ள எண்ணிக்கையையும் சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எண்ணும் முன், மொத்த வாக்குகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் படிவம் எண் 20-ஐ தேர்தல் பார்வையாளர்கள் சரிபார்த்து கையெழுத்திடுவார்கள்
- வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் நடைபெறும்
- வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட, அதிகமாக தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அது மீண்டும் சரிபார்க்கப்படும்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.