Lok Sabha Election 2024: ”வீட்டுக்கு வந்து டீ குடிங்க” முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்த நபர் - அடுத்து நடந்த சுவாரஸ்யம்!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் வீட்டிற்கு சென்று தேனீர் அருந்தினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அவருடன் அவரது சகோதரியும் உள்ளூர் எம்பியுமான கனிமொழியும், இங்கிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளரும், மாநில அமைச்சர்கள் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோரும் சென்றனர்.
டீ குடித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர்:
அப்போது, தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதியில் மீனவர் மக்களிடம் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் லயன்ஸ் டவுன் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது அந்த பகுதி உள்ள ஒரு வீட்டில் அவரை தங்கள் வீட்டில் வந்து தேனீர் அருந்த அழைப்பு விடுத்தனர். இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அந்த இல்லத்திற்கு சென்று தேனீர் அருந்தினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இன்று காலை தூத்துக்குடியில் உள்ள சந்தையில் மக்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்களை சந்தித்தார். தொடர்ந்து, அவர்களில் பலருடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும், சிலருடன் கைகுலுக்குவதைக் காண முடிந்தது.
பிரதமர் வீண் முயற்சி:
இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி, “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில்தான், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகை தருகிறார். மோடி கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை பார்வையிட மறுத்துவிட்டார். மேலும், வெள்ள நிவாரணத்தை கூட மறுத்துவிட்டார். தேர்தல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தோல்விக் கவலையில் சிக்கித் தவித்த பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து கோபமடைந்த தமிழர்களை அமைதிப்படுத்த வீணாக முயற்சிக்கிறார்.
பிஜேபியை எதிர்க்க துணிந்தவர்கள் வருமான வரித்துறை, அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளால் பயமுறுத்தப்படுகிறார்கள். மக்கள் இந்த நாடகத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், பாஜகவிடன் நட்பு கொண்டவர்கள், தேசிய கட்சியில் இணைந்தவர்கள் தங்களை ‘மிஸ்டர் கிளீன்’ என்று காட்டிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் இந்திய மக்களின் ஒரே நம்பிக்கை இந்திய கூட்டணி அமோக வெற்றியுடன் ஆட்சிக்கு வருவதுதான்" என்றார்.
முன்னதாக, நேற்று மாலை, அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில், 2023 டிசம்பர் வெள்ளத்தில் ஏற்பட்ட நிலைமையை சரிசெய்ய, மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி நிவாரண நிதி கோரப்பட்டது. மத்திய அரசு வழங்க மறுத்ததை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.