Lok Sabha Election 2024: லவுட் ஸ்பீக்கருடன் காரில் வந்த சுயேட்சை வேட்பாளர் - அடுத்து நடந்தது என்ன?
ஒலிபெருக்கியை கழட்டுமாறு காவல்துறையினர் வலியுறுத்தி நிலையில், நீங்களே கழட்டிக் கொள்ளுங்கள் என்று வாகனத்தின் சாவியை காவல்துறையிடம் கொடுத்துவிட்டு நடந்து சென்ற வேட்பாளர்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக, அதிமுக, சுழற்சிகள் என பல்வேறு கட்சிகள் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அம்பேத்கர் ரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தமிழ்நாடு சார்பாக இதன் மாநில தலைவர் அம்பேத்கர் என்பவர் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் வேட்பாளர் அம்பேத்கர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வேட்புமனு பல்வேறு திருத்தங்கள் இருந்ததால் இன்றைய தினம் தவறுகளை திருத்தம் செய்ய வருமாறு தேர்தல் அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன் காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பாளர் அம்பேத்கார் கார் மூலமாக வருகை தந்தார். அப்போது அவர் வருகை தந்த வாகனத்தில் கட்சியின் பெயர் மற்றும் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கட்சியின் பெயர் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒலிபெருக்கி உடனடியாக கழட்டுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
ஆனால் ஒலிபெருக்கியை நீங்களே கழட்டி கொள்ளுங்கள் என்று சாவியை காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டு வேட்பாளர் புறப்பட்டு சென்றார். அப்போது கட்சி கொடிகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே சென்றார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதேபோன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக நாம் தமிழர் கட்சியில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் வேட்பு மனுத் தாக்களுக்கு முன்பாக மூன்று சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் தங்களது ஆதரவாளர்களை ஊர்வலமாக அழைத்து வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வர முயன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் வந்த கார் உட்பட மூன்று கார்களை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து சேலம் மாநகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஒப்படைத்தனர்.
இதேபோன்று நேற்றைய தினம் சேலம் மாநகர பகுதியில் திமுக கட்சி கொடியுடன் வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சிறைபிடித்தனர். சேலம் மாநகர பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை ஐந்து சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.