Lok Sabha Election 2024: போதமலைக்கு தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள்
போதமலை மலை கிராம வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் தலைச்சுமையாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு நடந்த சென்ற அதிகாரிகள்.
தமிழ்நாடு முழுவதும் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எதற்காக தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லும் பணியானது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலை மலைக்கிராமம் உள்ளது. இங்கு நாளை நடைபெறவுள்ள நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, கீழுர், மேழுர் மற்றும் கெடமலை மலைக்கிராமத்தில் உள்ள 845 வாக்காளர்களும் வாக்கு செலுத்தும் வகையில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வைப்பறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திர தொகுப்பு - 2, படிவம் ஆகியவற்றை மண்டல அலுவலர் விஜயகுமார் தலையில் 9 பேர் கொண்ட குழுவினர் தலைச்சுமையாக அடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிமீ நடந்தே எடுத்து சென்றனர்.
இராசிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போதமலை மலை கிராமங்கள். போதமலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இதன் வடக்கே ஜருகு மலையும், தெற்கே கொல்லிமலையும் அமைந்துள்ளது. போதமலை மொத்தம் 13 கிமீ தூரம் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 அடி உயரத்தில் உள்ளது. இங்கு கீழுர், கெடமலை, மேலூர் என மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். போதமலைக் கிராமங்களுக்கு சாலை வசதி கிடையாது. எனவே அங்கு நடந்துதான் செல்ல வேண்டும். இவர்களுக்காக வாக்குப் பதிவு செய்ய ஒவ்வொரு தேர்தலிலும் இரு மையங்கள் ஏற்படுத்தப்படுவது வழக்கம்.
இதன்படி வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகம் செய்யபடுவதற்கு முன்னர் போதமலை கிராமங்களுக்கு கழுதையின் மேல் வாக்குப் பெட்டிகளை வைத்துக் கொண்டு செல்வது வழக்கமாகவே இருந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகைக்குப் பிறகு கழுதையை பயன்படுத்துவதில்லை. தேர்தல் காலங்களில் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் மற்றும் வருவாய்த் துறையின் கடைநிலை ஊழியர்கள் மட்டும் செல்வார்கள். இந்நிலையில் வருவாய்த்துறையினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர். மண்டல அலுவலர் பழனிசாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு போதமலை ஏறினார். இவர்களுக்கு பாதுகாப்பாக ராசிபுரம் போலீசாரும், வனசரக அலுவலர்களும் மலைக்கு சென்றுள்ளனர். போதமலை மலை கிராமத்திற்கு ரூ.140 கோடி செலவில் கடந்த சில மாதங்களாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் அடுத்து வரும் தேர்தலில் தலைச்சுமையாக தூக்கிச் செல்லும் அவல நிலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.