சீட் கொடுக்காததால் ஏற்பட்ட விரக்தியா? - நாளை ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையும் தேமுதிக மாவட்ட செயலாளர்
நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்காததால் அதிருப்தி அடைந்த தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் சேர்கிறார்.
தஞ்சாவூர்: நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தி அடைந்த தேமுதிக தஞ்சை மாவட்ட செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சேர்கிறார். இதற்கிடையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சிக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சி வேட்பாளராக சிவனேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் மாவட்ட செயலாளரான டாக்டர் ராமநாதன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை அவர் சந்தித்துள்ளார். இதையடுத்து தஞ்சை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டாக்டர் ராமநாதன் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் கூண்டோடு விலகி பாஜகவில் சேர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கட்சிகள் அமைத்த கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் நான்கு முனை போட்டி உள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்துள்ளது தே.மு.தி.க. இதில் அ.தி.மு.க. 33 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும் போடடியிடுகிறது. தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் தஞ்சை தொகுதியும் ஒன்று.
மாவட்ட செயலாளர் ராமநாதனுக்கு சீட் இல்லை
இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் சிவனேசன் ஆகியோர் விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் டாக்டர் ராமநாதனுக்கு சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ஆதரவாளர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் வேட்பாளராக சிவனேசனை பிரேமலதா அறிவித்தார். எப்படியும் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என்ற நிலையில் இருந்த டாக்டர் ராமநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாட்டில் தனது வீட்டில் தங்கி இருந்த டாக்டர் ராமநாதனை சந்தித்தனர். இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டாக்டர் ராமநாதன் பாஜகவில் இணைவார் என்று காட்டுத் தீ போல் தகவல்கள் பரவி வந்தது. இருப்பினும் டாக்டர் ராமநாதன் அமைதி காத்து வந்தார்.
நாளை பாஜகவில் இணைகிறார்
இந்நிலையில் டாக்டர் ராமநாதன் தனது ஆதரவாளர்களுடன் கூண்டோடு தே.மு.தி.க.வில் இருந்து விலகி பா.ஜ.கவில் நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சி மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சேர உள்ளதாக தகவல்கள் உறுதியாகி உள்ளது.. இது குறித்து டாக்டர் ராமநாதன் கூறுகையில், சீட் கிடைக்காததால் நான் விலகவில்லை. கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காதால் விலகி பா.ஜனதாவில் இணைகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிகவில் இருந்து அவர் விலகுவது உறுதியாகிவிட்டது.
விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்த டாக்டர் ராமநாதன், தேமுதிக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், தெற்கு மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார். இரண்டு முறை தஞ்சை சட்டசபை தொகுதியிலும், ஒருமுறை தஞ்சை நாடாளுமன்ற தொகுதியிலும் போடடியிட்டு தோல்வியடைந்தார். தென்னமநாடு ஊராட்சியில் தொடரந்து 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு
இதற்கிடையில் டாக்டர் ராமநாதனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சி பொதுச்சசெயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சி நற்பெயருக்கும், புகழுக்கும், களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து டாக்டர் ராமநாதன் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.