(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! பீகாரில் பா.ஜ.க. - ஜனதா தள கூட்டணிப் பங்கீடு எப்படி?
பீகாரில் பா.ஜ.க. - ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப்பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பா.ஜ.க. - ஜனதா தள கூட்டணி:
பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பீகார் முதலமைச்சரும், ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ்குமார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் கடந்த மாதம் இந்தியா கூட்டணியில் இருந்து பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தார்.
வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிக முக்கியமான மாநிலங்களில் பீகாரும் ஒன்று. பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் பா.ஜ.க. – ஜனதா தளம் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பீகாரில் தொகுதிப் பங்கீடு எப்படி?
கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 17 தொகுதிகளில் பீகாரில் வெற்றி பெற்றது. ஜனதா தளம் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த சூழலில், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 17 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது. இதனால், ஜனதா தளத்திற்கு 14 தொகுதிகள் ஒதுக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள ஜனதா தளம் பா.ஜ.க.வை விட குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவது அக்கட்சியினர் இடையே அதிருப்தியாக இருந்தாலும், அவர்களை விட அதிக சட்டமன்ற தொகுதிகள் வென்ற பா.ஜ.க. உதவியுடன் ஆட்சி நடைபெற்று வருதால் ஜனதா தளம் கட்சி பா.ஜ.க.வின் முடிவுக்கு கட்டுப்படும் என்றே கருதப்படுகிறது.
இதுதவிர, உபேந்திர குஷ்வகா கட்சிக்கு 1 தொகுதியும், மஞ்சிக்கு 1 தொகுதியும், சிராக் – பசுபதி பராசுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று கருதப்படுகிறது. எஞ்சிய ஒரு தொகுதி விகாஷ்ஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிப்பங்கீட்டின் அடிப்படையிலே பா.ஜ.க. – ஜனதா தளம் அடிப்படையிலே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து உறுதி செய்யப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி, ஜார்க்கண்டிலும் ஜனதா தளம் போட்டி?
நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியினர் பீகார் மட்டுமின்றி உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டிலும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் பா.ஜ.க.விடம் உத்தரபிரதேசத்தின் பல்பூர் தொகுதியிலும், ஜார்க்கண்டின் சத்ரா தொகுதியிலும் போட்டியிடுவதற்கு ஏதுவாக அந்த தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
நிதிஷ்குமார் அடிக்கடி கூட்டணி மாறியதன் தாக்கம் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா? அல்லது ஆளுங்கட்சி கூட்டணியே பீகாரில் பெரும்பான்மை வெற்றி பெறுமா? என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.