’’ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா’’ - மாறி மாறி திட்டிக்கொண்ட அதிமுக, அமமுகவினர்...!
''தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு இருந்த போது திருவிடைமருதுார் ஒன்றிய செயலாளர் அசோக்குமாரை, அமமுகவினர், கீழே தள்ளி விட்டனர்''
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மற்ற மாவட்டங்களில் காலியாகவுள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகத்தில் காலியாகவுள்ள 52 பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், உறுப்பினர்கள் இறப்புக் காரணமாக 49 பதவிகளுக்கும், பதவி விலகால் ஒரு பதவிக்கும், கடந்த முறை தேர்தலின்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்படாதன் காரணமாக காலியாக இருக்கும் 2 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட ஊராட்சிக் குழுவில் 16ஆவது வார்டு (அம்மாபேட்டை பகுதி), கும்பகோணம் ஒன்றியத்தில் 24ஆவது வார்டு, ஒரத்தநாடு ஒன்றியத்தில் 1-ஆவது வார்டு ஆகியவற்றில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதே போல, பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட த. மரவக்காடு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர், திருவையாறு ஒன்றியம் வளப்பக்குடி, வெங்கடசமுத்திரம், திருவிடைமருதூர் ஒன்றியம் விளங்குடி, திருவோணம் ஒன்றியம் அதம்பை ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் பட்டுக்கோட்டை, பூதலூர், பாபநாசம், திருவையாறு ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு பதவிக்கும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 2 பதவிகளுக்கும், மதுக்கூர் ஒன்றியத்தில் 3 பதவிகளுக்கும், அம்மாபேட்டை, கும்பகோணம் ஒன்றியங்களில் தலா 4 பதவிகளுக்கும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர், ஒரத்தநாடு ஒன்றியங்களில் தலா 5 பதவிகளுக்கும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 6 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனு மீதான பரிசீலனை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. திரும்ப பெறுவதற்கான தேதி கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதியும், வாக்குப் பதிவு அக்டோபர் 9 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த கொற்கை-மருதாநல்லுார், ஒன்றிய குழு உறுப்பினருக்கான 24 ஆவது வார்டு தேர்தலில் திமுக சார்பில் சசிகுமாரும், அதிமுக சார்பில் சீதாராமனும், அமமுக சார்பில் விஜய ஆனந்தும் போட்டியிடுகின்றனர். வாக்கு சேகரிப்பு முடிவடைந்ததை முன்னிட்டு, மூன்று கட்சியினரும் மாலையில் பரபரப்புடன் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் அதிமுகவினரும், அமமுகவினரும் ஒரே இடத்தில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், செந்தில், அசோக்குமார், முன்னாள் ஒன்றியசெயலாளர் சின்னையன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி மற்றும் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் கூடினர். அப்போது, நேரம் முடிந்ததால், அமமுகவினர், பிரச்சாரத்தை முடித்து கொண்டனர். ஆனால் அதிமுகவினர், பிரச்சாரத்தை முடிக்காமல், மைக்கில் பேசி கொண்டிருந்தனர். இதனையறிந்த அமமுகவினர், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம், புகார் அளித்தனர்.
அப்போது, இரண்டு கட்சியினரும் ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு இருந்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் திருவிடைமருதுார் ஒன்றிய செயலாளர் அசோக்குமாரை, அமமுகவினர், கீழே தள்ளி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார், ’’ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா’’ என்று மைக்கில் பேசியதை, தொடர்ந்து அதிமுகவினரும், அமமுகவினரும் கொச்சையான வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பிரச்சனைக்கு பிறகு இருவரும் கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது